விஜயகாந்த் மதுரை வீரன். அவரை மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று உருக்கமுடன் மனம் திறந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
25.8.19522ல் மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தில் பிறந்தவர் விஜயராஜ். படிப்பில் அதிக ஆர்வம் இல்லாததால் தனது தந்தையின் அழகர்சாமி ரைஸ்மில்லை கவனித்துக்கொண்டு சினிமாவில் அதிகம் நாட்டம் கொண்டவராக வலம் வந்தார். தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அதற்கடுத்து ரஜினிகாந்தின் ரசிகர். ரஜினிகாந்த் மதுரை சென்றபோது அவரை ஒரு ரசிகராக சந்தித்து பேசியுள்ளார் விஜயராஜ்.
தானும் சினிமாவில் ஹீரோ ஆகவேண்டும் என்கிற கனவுடன் நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னை வந்து ஆரம்ப கட்ட முயற்சிகளில் அவமானப்பட்டு, விடாமுயற்சியினால் 1979ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகரானார். அந்த காலத்தில் ரஜினிகாந்த் உச்சநட்சத்திரமாக இருந்ததால், விஜயராஜ் என்கிற பெயரை ராஜ் என்பதற்கு பதிலாக காந்த் என்று மாற்றி பரபரப்பை ஏற்படுத்தினார் இனிக்கும் இளமை படத்தின் தயாரிப்பாளர் எம்.ஏ.காஜா.
1984ம் ஆண்டில் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில்கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், உழவன் மகன், கேப்டன் பிரபாகரன், ரமணா, வானத்தை போல, புலன் விசாரணை, ஊமை விழிகள் போன்ற படங்கள் விஜயகாந்த்தி திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்கள்.
150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து நடிகர் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார் என்று பாராட்டும்படி நடந்து கொண்டார். அரசியல் ஆர்வம் கொண்டு தேமுதிகவை தொடங்கி எதிர்க்கட்சித்தலைவரும் ஆகி சாதனை படைத்தார்.
எம்.ஜி.ஆரின் மீது அதிக பற்று வைத்திருந்த விஜயகாந்துக்கு மக்களிடையே எம்.ஜி.ஆருக்கு உள்ள செல்வாக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானும் பார்த்து பார்த்து வளர்த்தெடுத்தார்கள். அதில் ஒன்றுதான் தன் அலுவலகத்தில் வருவோருக்கு எல்லோருக்கும் உணவளித்தது. சினிமா படப்பிடிப்புகளிலும் தனக்கு கிடைப்பது போன்று சக ஊழியர்களுக்கும் உணவு கிடைக்கும்படி செய்தார். பொதுவாகவே எளிமையானவர் விஜயகாந்த்.
2006ம் ஆண்டு முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வந்தார் விஜயகாந்த்.
சாப்பாட்டு விசயத்தில் விஜயகாந்த் இப்படி நடந்துகொண்டது மக்களிடையே அதிகம் சென்று சேர்ந்தது. அதுவும் ஒரு முக்கிய காரணமாகத்தான் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானவர்களை திரண்டு வந்து அஞ்சலி செலுத்த வைத்தது.
அவரது மறைவுக்கு பின்னரும் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கோயம்பேடும் தேமுதிக அலுவலகத்திற்கு பல ஊர்களில் இருந்தும் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். அப்படி வருவோருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இது உலக சாதனை படைத்திருக்கிறது.
விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி இருந்த நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.
ஒன்றிய அரசும் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. விஜி.. விஜி..என்று அன்புடன் அழைத்து வந்த ரஜினிகாந்த் இது குறித்து மகிழ்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்னை மாதிரியே இருந்து தனது பெயர் மாதிரியே வைத்துக்கொண்டதால் ஆரம்பத்தில் ரஜினிக்கு அதிருப்தி என்று பேச்சப்பட்டாலும் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. 1987ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் ரஜினிகாந்தும் விஜயகாந்தும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்கள்.
விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது, தான் சிகிச்சை மேற்கொண்ட சிங்கப்பூர் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்தவர் ரஜினிகாந்த். அவ்வப்போது நேரிலும் சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.
பத்மபூஷன் விருது மற்றும் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இரண்டுக்குமாக விஜயகாந்த் குறித்து உருக்கமுடன் மனம் திறந்திருக்கிறார் ரஜினிகாந்த். ’’என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளது. அதில் ரொம்ப மகிழ்ச்சி.
அதுமட்டுமல்லாமல் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் அவரின் வரலாற்றினை பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டக்குன்னு தோன்றி பல சாதனைகளை செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அவர் நாமம் வாழ்க. ’’