என்னதான் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் விளக்கம் கொடுத்து வந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவை அடுத்து தலைமையேற்று நடத்தப்போவது செங்கோட்டையன் தான் என்கிற பேச்சு தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் செங்கோட்டையனுக்குத்தான் முதல்வர் நாற்காலி காத்திருந்தது. கூவத்தூர் பங்களாவில் நடந்த பேச்சுவார்த்தையில் செங்கோட்டையனிடம் அப்போது அந்த சாமர்த்தியம் இல்லாததால் எடப்பாடி பழனிச்சாமி இதுதான் சரியான நேரம் என்று முந்திக்கொண்டார். அவர் முதல்வர் நாற்காலியில் உட்கார தங்கமணியும், வேலுமணியும் அப்போது பெரும் உதவி செய்திருக்கிறார்கள். அதற்கு பிரதிபலனாகத்தான் இன்று வரைக்கும் அவர்கள் இருவருக்கும் கட்சியில் முக்கியத்துவம் இருந்து வருகிறது.
அன்று முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டிய செங்கோட்டையன், இன்று தேர்தல் பிரச்சாரக்குழுவில் 10 பேரில் ஒருவராக இருக்கும் அளவுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆதங்கம் செங்கோட்டையனுக்கு இருக்கிறதோ இல்லையோ, அவரது ஆதரவாளர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இதனால் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை தொடர்ந்து விரும்பாமல் அதிருப்தியில் உள்ளனர் என்கிறது அதிமுக வட்டாரம்.
அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த அதிமுகதான் வெற்றிக்கான ஒரே வழி என்று தெரிந்திருந்தும், அதற்கு சம்மதிக்காமல், வேட்பாளர்கள் தேர்விலும் கவனம் இல்லாமல் தேர்தலை சந்தித்தால் வாக்கு சதவிகிதம் குறைந்துவிடும் என்று இப்போதே அதிமுக சீனியர்கள் பலர் கணித்துள்ளனர். இதனால்தான் இதற்கெல்லாம் காரணமான எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்டிவிட்டு செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுகவை கொண்டு செல்ல வேண்டும். அப்படி சென்றால்தான் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று பேசி வருவதாக தகவல் பரவுகிறது.
செங்கோட்டையன் தலைமையை பலரும் விரும்பி அதற்கான முன்னெடுப்புகளில் பலரும் இறங்கி வருவதால்தான் செங்கோட்டையனும் ஒருங்கிணைந்த அதிமுகவிற்காக வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். வைத்திலிங்கத்தை சந்தித்ததையும், அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பதையும் இதுவரை சொல்லாமல் அவர் மவுனம் காத்து வருவதாக சொல்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.
தலைமை மாற்றத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவராமல் பிடிவாதம் பிடித்தால் வேலுமணி உள்பட பலரும் பாஜக பக்கம் தாவிவிடுவார்கள் என்ற சலசலப்பும் அதிமுகவில் எழுந்திருக்கிறது. இந்த லிஸ்டில் செங்கோட்டையனும் உள்ளதாகவும் தகவல்.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வமும், தேனியில் டிடிவி தினகரனும் வெற்றி பெற்றுவிட்டாலோ, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டாலோ அதிமுகவில் அது பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள். செல்வாக்குள்ள இவர்களை எல்லாம் இழந்துவிட்டு வாக்குகளை ஏன் இழக்க வேண்டும் என்று கட்சியினர் கொதித்தெழுவார்கள் என்ற பேச்சும் அதிமுக வட்டாரத்தில் தொடர்ந்து எழுந்து வருகிறது.
தொடர்ந்து 8 தோல்விகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, மக்களவைத் தேர்தலில் 9வது தோல்வியை சந்திப்பார் என்பதால்தான் இத்தனை குழப்பமும் எழுந்திருக்கிறது. ஒரு வேளை அதிக வெற்றி அல்லது அதிக வாக்கு சதவிகிதத்தை அவர் பெற்றுவிட்டால் இந்த குழப்பத்திற்கு அதிமுகவில் அதிகம் வாய்ப்பில்லை என்றே கருதுகின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.
9வது தோல்வியை எடப்பாடி பழனிச்சாமி எட்டாமல் இருந்தால் வைத்திலிங்கம் சந்திப்பை மறந்துவிடுவார் செங்கோட்டையன். அதே நேரம், 9வது தோல்வியை எடப்பாடி பழனிச்சாமி எட்டிவிட்டால், அமைதியாக இருக்கும் செங்கோட்டையன் கொதித்தெழுந்து வைத்திலிங்கம் சந்திப்பை வெளியே சொல்லி தலைமை மாற்றத்திற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பார் என்கிறார்கள் மூத்த அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவில் இத்தனை குழப்பங்கள் இருப்பதாக ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி வரும் நிலையில், ’’அதிமுகவில் எந்த குழப்பங்களும் இல்லை. அதிமுகவில் வீண் குழப்பம் ஏற்படுத்த பல நினைக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜகவுக்கு சென்றுவிடுவார்கள் என்று சொல்லுவது எல்லாம் கட்டுக்கதை’’ என்கிறார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார். அவர் மேலும், ‘’அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்துதான் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்கினோம். அவரது தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்தோம். அவர் தலைமை மாற்றத்தை யாரும் பேசவில்லை’’ என்கிறார்.
ஆனால், தொடர்ந்து செய்திகள் அப்படி இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வாரா? தலைமை மாற்றமா? என்பதெல்லாம் தேர்தல் முடிவைப் பொறுத்தே அமையும் என்பதால் திகுதிகுவென்று ஜூன் -4ஐ எதிர்ப்பார்த்து இருக்கின்றனர் அதிமுகவினர்.