அந்த ஆடியோவில் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார் எழுந்திருக்கும் நிலையில், தன் குரல் போல் யாரோ பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று கார்த்திக் குமார் ஒருபக்கம் அதிர்ச்சி தருகிறார் என்றால், அது சுசித்ராவின் இரண்டாவது கணவரின் குரல் என்று மேலும் அதிர்ச்சியை தருகிறார் நடிகை கஸ்தூரி.
சுசி லீக்ஸ் -2.0 விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சகட்டுமேனிக்கு பலரின் மீது சேற்றை வாரி இறைத்து வருகிறார் பாடகி சுசித்ரா. முதல் கணவர் கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளர். அவர் நடிகர் தனுஷ் போன்றோருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். இதையெல்லாம் பார்த்துதான் அவரை விவாகரத்து செய்தேன். அதுவும் விவாகரத்து கேட்டு 14 வருடங்கள் போராடினேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், பல நடிகை, நடிகர்களையும் இழுத்துவிட்டு கோலிவுட்டில் மீண்டும் தீயை பற்ற வைத்திருக்கிறார்.
சுசி லீக்ஸ் பற்றி விரிவாக தொடர்ந்து பேசி வந்த பயில்வான் ரங்கநாதனை சுட்டுக்கொல்வேன்; வெட்டிக்கொல்வேன் என்று ஆத்திரப்படுகிறார் சுசித்ரா. ஆனால், பயில்வானோ, சுசித்ராதான் தன்னை அடிக்கடி தொடர்புகொண்டு பேட்டி எடுக்கச் சொல்கிறார். முன்னாள் கணவர்கள் குறித்த 6 ஆடியோக்களை எனக்கு அனுப்பி வைத்தார். அதில் ஒரு ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன் என்று சுசி லீக்ஸ் விவகாரத்தில் பரபரப்பு கூட்டுகிறார்.
அந்த ஆடியோவில், ஏன் இப்படி பேசுற? நல்ல குடும்பத்த சேர்ந்தவள்தானே… ஏன் அந்த ஜாதி மாதிரி பேசுற? என்று பட்டியலின சாதியை குறிப்பிட்டு பேசியுள்ளார் ஒரு ஆண். அந்த குரல் கார்த்திக்குமார் குரல் என்று பரவி வருகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட பலர் பட்டியிலனத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று கார்த்திக் குமாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து, ’’சுசித்ராவிவுடன் பேசியதாக வெளியாகி இருக்கும் தொலைபேசி உரையாடலில் பட்டியலின மக்களை புண்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார் கார்த்திக் குமார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இயக்குநரிடம் புகார் கூறி இருக்கிறார்.
தேசிய பட்டியலின ஆணையம் அந்த மனுவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்க, அந்த ஆடியோ குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ’’அந்த ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. நான் பட்டியலின மக்களை பற்றி பேசவில்லை. என் குரலில் பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்று மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதியிடம் புகார் அளித்துள்ளார் கார்த்திக் குமார்.
இந்த இரண்டு புகார்களையும் விசாரித்து வருகிறது காவல்துறை. இதற்கிடையில், ‘’கார்த்திக் குமாரை விவாகரத்து செய்த பின்னர் ஒரு வழக்கறிஞரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார் சுசித்ரா. அவரையும் பிரிந்துவிட்டார். அவரின் குரல்தான் அந்த ஆடியோவில் உள்ள குரல்’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் நடிகை கஸ்தூரி.