மக்களவைத்தேர்தலின் போது தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என்று தமிழக பாஜகவினர் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று கணித்து, அதற்கு விசாரிக்க விடாமல் இழுத்தடித்து வருகின்றனர் பாஜகவினர்.
கடந்த மார்ச் மாதம் மக்களவைத்தேர்தலின் போது தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு 4 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது. பறக்கும்படை சோதனையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு சென்ற மூன்று பேரிடம் நடந்த விசாரணையில் அந்தப்பணம் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது. நயினார் நாகேந்திரன் தரப்பினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளரும் பாஜக தொழிற்துறை மாநிலத்தலைவருமான கோவர்த்தனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் கடந்த 7ம் தேதி அன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி, ஆர்.எஸ்.எச். பிரமுகர் கேசவ விநாயகம் ஆகியோருக்கு 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
நேற்று காலை 10 மணிக்கு சிபிசிஐடி போலீசில் ஆஜராக வேண்டிய இந்த மூன்று பேருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. வாரணாசியில் இருப்பதால் வரும் 1ம் தேதி ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் கொடுத்துள்ளனர்.
உண்மையாகவே மூன்று பேரும் வாரணாசியில் இருக்கிறார்களா? என்று சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கியதில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவை வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திடீரென்று கோவையில் சேகர் வீட்டிற்கு சென்றதும், சிபிசிஐடி போலீசாரை பார்த்து அதிர்ந்து போயுள்ளார் சேகர். பின்னர் சுதாரித்துக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார்.
ஆவணங்களை வைத்து சிபிசிஐடி போலீசார் சரமாரியாக கேள்விகள் எழுப்பியபோதும் விசாரணையில் பல கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகவே இருந்துள்ளார் சேகர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் சொல்லிவிட்டு திரும்பியுள்ளனர் போலீசார். கடைசிவரையிலும் கேசவவிநாயகம், முரளி இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
’’பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்திற்கும் வழக்கிற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவுமில்லை. விசாரணையில் சம்பந்தமில்லாத பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்’’என்று விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சேகர்.
இந்த வழக்கில் மேலும் அவர், ‘’தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவல்துறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணை கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருக்கிறோம். அதற்கான உத்தரவு வருவதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போலீசார் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கேசவ விநாயகம். இதனால், இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றால் ஓடி ஒளிவது ஏன்? விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.