கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் செய்ய மத அடிப்படையில் உரிமை உண்டு என்றும், இதுதான் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி மனிதர் உரிமை என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி உயர்நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை அளித்ததால் நீதிபதி சுவாமிநாதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன.
கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரரின் ஜீவ சமாதி உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் இக்கோவிலில் நடைபெறும் அன்னதானத்தின் போது, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சணம் செய்து வருவது வழக்கம். இந்த வழக்கம் 120 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்கிறார்கள் சத்குரு சதாசிவ பிரமேந்திரரரின் ஜீவ சமாதி தரப்பினர்.
கர்நாடகாவில் மங்களூர் அருகே குக்கே சுப்ரமணிய சாமி கோயிலில் இதே போன்ற வழக்கம் இருந்து வந்த நிலையில் 500 ஆண்டுகளாக அந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த சடங்கிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில், 2014ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், உச்சநீதிமன்றம் அந்த சடங்கிற்கு தடை விதித்தது.
அதே போன்று, கரூரில் நடைபெறும் இந்த சடங்கை தடை செய்யக்கோரி 2015ம் ஆண்டில் தலித் பாண்டியன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில், கர்நாடக மாநிலத்தின் அந்த சடங்கிற்கு தடை விதித்த உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி நெரூர் சடங்கிற்கு தடை விதித்தது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு.
அப்படி இருந்தும் கடந்த 2023ல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து அங்க பிரதட்சணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், 2015ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட இந்த சடங்கிற்கு அனுமதி கேட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உச்சநீதிமன்ற தீர்ப்பினையும், இதற்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், ’’ஆன்மீக பலனத்தரும் என்கிற நம்பிக்கையில் பக்தர்கள் ஜீவசமாதி தினத்தில் சாப்பிட்ட வாழை இலைகளில் அங்கப் பிரதட்சணம் செய்வது பாரம்பரிய வழக்கம். இது அரசமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமை. சமயம் சார்ந்த உரிமை என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. இதை யாரும் தடை செய்யக்கூடாது. தீச்சட்டி ஏந்துவது, அலகு குத்திக்கொள்வது போல இதுவும் நம்பிக்கை சார்ந்த விஷயம். இந்த சடங்கை நடத்த அதிகாரிகளின் அனுமதியும் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தார்.
இதே மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு தவறானது என்றும், அந்த தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்லி அதிரவைத்தார்.
இந்த உத்தரவை அடுத்து கடந்த மே18ம் தேதி அன்று எச்சில் இலையில் உருளும் சடங்கு நடந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
’’பக்தி என்ற பெயரால் மக்களை காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லலாமா? எச்சில் இலை மீது உருளுவது அருவருப்பானது அல்லவா? சுகாதாரக் கேடு அல்லவா? ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவுகள் வெளிவருவது கண்டு சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். உச்ச நீதிமன்றத்தை விட தனது அதிகாரம் மேலானது என நினைத்து செயல்பட்டிருக்கும் இந்த நீதிபதி மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை’’ என்று தெரிவித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கே.சந்துரு, ‘’கோவிட் காலத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த சமயத்தில் நோய் தொற்றினாலும் பரவாயில்லை என்று எந்த தனி நபராவது கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்டால் எந்த நீதிமன்றமாவது அனுமதித்திருக்குமா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
அவர் மேலும், ‘’மக்களின் நம்பிக்கைகள் அனைத்தும் சடங்குகளாக மாறிவிட முடியாது. எல்லா நம்பிக்கைகளுக்கும் மதம் சார்ந்த அடிப்படை வழங்க முடியாது’’ என்கிறார்.
’’சுத்தம் சோறு போடும் என்று பிள்ளைகளுக்கு பாலபாடம் நடத்தும் நாம், எச்சில் இலையில் உருளுவதை அடிப்படை உரிமையாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றும் தனது கருத்தை அவர் ஆழமாக எடுத்து வைக்கிறார்.