நாம் தமிழர் கட்சி – தமிழக வெற்றிக்கழகம் இடையே கூட்டணி ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் என்று கட்சியின் பெயரை மட்டுமே அறிவித்துள்ள விஜய், இன்னும் கட்சியின் கொள்கைகளை அறிவித்து, கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும், 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருப்பதாகவே செய்திகள் வருகின்றன.
விஜய் கட்சி பற்றி எதுவும் சொல்லாமலேயே, அவருடன் கூட்டணிக்கு தயார் என்கிறாரே சீமான்? தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில் பங்கேற்பீர்களா என்று கேட்டால்? அழைப்பு வந்தால் செல்வேன் என்கிறாரே. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, என் தம்பி ஸ்டைலில் சொல்கிறேன்… I’M Waiting.. என்று சொல்கிறாரே சீமான். விஜய் எதுவும் பேசாமலேயே சீமான் ஏன் இப்படி அள்ளிவிடுகிறார். நாளை ஒருவேளை விஜய் இவரை சேர்க்காவிட்டால் என்னவாகும் சீமானின் நிலைமை? நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிடுவார்களே என்ற விமர்சனங்கள் பரவுகின்றன. ஆனால், நெருப்பில்லாமல் புகையுமோ?
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தமிழக வெற்றிக்கழகம். தனித்து நின்றாலே விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தாலும், கூட்டணி பலத்துடன் நிற்பதே சரியானதாக இருக்கும் என்று விஜய்யின் நலன் விரும்பிகள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர் என்றும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய நபர் மூலமாக அதிமுகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டால் தமிழக வெற்றிக்கழகத்திற்கு நல்லதொரு எதிர்காலம் உண்டு என்று அறிவுறுத்தியதாகவும் அடிக்கடி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
கட்சி தொடங்கியதும் தனித்து நின்றால்தான் வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பது தெரியவரும். இதன் மூலம்தான் தனித்த பலம் என்ன என்பது தெரியவரும் என்று பலரும் விஜய்க்கு ஆலோசனைகள் சொல்லி வந்தாலும், இந்த பரீட்சை எல்லாம் தேவையில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெற்று முதல்வர் ஆவதற்கான வழிகளில் பயணிக்க வேண்டும் என்று அதிரடி காட்டி வருகிறாராம் ஜான் ஆரோக்கியசாமி.
ஐபேக் நிறுவனம் நடத்தி இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கு வரும் பிரசாந்த் கிஷோர் போலவே பெர்சனா டிஜிட் நிறுவனம் நடத்தி பி.கே. போலவே அரசியல் நிபுணராக உள்ளார் ஜான் ஆரோக்கியசாமி. இவர் மும்பையில் நிறுவனம் நடத்தி வந்தாலும் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழக அரசியல் நிலவரம் முழுவதுமாக அறிந்தவர் என்பதால் விஜய் இவர் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளார் என்கிறார்கள்.
பலரையும் ஈர்த்து பரபரப்பாக பேசப்பட்ட கடந்த 2016ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாசின் வித்தியாசமான பிரச்சாரத்தின் பின்னணியில் இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமியாம். இவர்தான் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திச்செல்கிறார் என்கிறார்கள்.
திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்து தனித்த செல்வாக்கையும், கணிசமான வாக்கு சதவிகிதத்தையும் சீமான் வைத்திருந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு இல்லாததால் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரும் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் சீமான், ஒரு மாற்று வேண்டும் என்று நினைக்கிறாராம்.
இந்த நேரத்தில் விஜய்யுடனான கூட்டணி சரியாக என்று நினைக்கிறார் சீமான் என்கிறார்கள். அதே போன்று சீமானின் அரசியல் அனுபவம் நமக்கு உதவியாக இருக்கும் என்று விஜய்க்கு அறிவுறுத்தி வருகிறார்களாம் அவரது நலம் விரும்பிகள். இதற்கு விஜய் சம்மதித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்ததால்தான் தொடர்ந்து சீமான் பொதுவெளியில் விஜய்யை வாழ்த்தியும், தவெக மாநாட்டில் கலந்துகொள்வேன் என்றும் சொல்லி வருகிறார்.
விஜய் – சீமான் கூட்டணியில் ஜான் ஆரோக்கியசாமிதான் முன்னின்று எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறார். இதில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்கும் உள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.அந்தணன்.
நாதக – தவெக கூட்டணி வைத்த பின்னர், நாதகவில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய நிர்வாகிகளை தவெகவில் இணைப்பதற்கான முயற்சிகளில் இறங்க முடிவெடுத்துள்ளாராம் ஜான் ஆரோக்கியசாமி.
தவெக – நாதக கூட்டணி சேர்ந்தால் முதல்வர் நாற்காலி உறுதி என்றே விஜய் தரப்பும் சீமான் தரப்பும் நம்புகிறது. அதனால் தான், விஜய் முதல்வர் – சீமான் துணைமுதல்வர் என்று ஒரு முடிவும், இரண்டறை வருடம் விஜய் முதல்வர், அடுத்த இரண்டறை வருடம் சீமான் முதல்வர் என்றெல்லாம் அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணி ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டிருக்கிறது என்கிறார் அந்தணன். எதுவாக இருந்தாலும் எல்லாம் ஜூன் 4க்கு பிறகுதான் தெரியும் என்பதால் Waiting.