முன்னாள் கணவர் கார்த்திக்குமார் பற்றி அவதூறாக பேசக்கூடாது என்று பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
எதற்காக இந்த தடை? பத்திரிகை துறையில் இருந்து ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக இருந்த சுசித்ரா, திரையுலகில் பின்னணிப்பாடகியாக உயர்ந்தார். இவர், யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் படங்களில் துணை நடிகராக நடித்த கார்த்திக்குமாரை கடந்த 2015ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.
‘சுசி லீக்ஸ்’ எனும் பெயரில் கடந்த 2016ம் ஆண்டில் த்ரிஷா, ஆண்ட்ரியா, அனுயா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நடிகைகள் மற்றும் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி கோலிவுட் வட்டாரத்தை அதிரவைத்தது.
இந்த விவகாரத்தில் தனது கணவர் நடிகர் கார்த்திக்குமாரை 2017ல் விவாகரத்து செய்தார் சுசித்ரா. இந்த சம்பவத்திற்கு பின்னர் சுசித்ரா திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் அண்மையில் அவர் யூடியூப் தளத்திற்கு அளித்திருந்த பேட்டியில், ‘’சுசி லீக்ஸ் விவகாரத்தில் தேவையில்லாமல் என்னை இழுத்து விட்டார்கள். என் கணவர் கார்த்திக்குமாரும், நடிகர் தனுஷும் தான் இதற்கெல்லாம் காரணம். த்ரிஷாவே தன்னோட பிரைவேட் படங்களை கொடுத்தார். ஆனால், நான் பலிகடா ஆகிவிட்டேன்’’ என்று நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் கொடுத்திருந்தார்.
அத்தோடு நில்லாமல், ‘’ என் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவரும் நடிகர் தனுஷும் ரூமுக்குள் சென்று தனியாக இருப்பார்கள். அவர்கள் இருவரும் ரூமில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது தெரியும். வேறு இரண்டு நண்பர்களுடன் என் கணவர் அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். இதனால் சந்தேகம் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தேன். அதில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது உறுதியானது’’ என்று சொன்ன சுசித்ரா. இதில் அதிருப்தி ஏற்பட்டு விவாகரத்து கேட்டு 14 வருடங்கள் போராடினேன்’’ என்று சொல்லி அதிர வைத்தார்.
சுசித்ராவை விவாகரத்து செய்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழும் கார்த்திக் குமார், ‘’நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை’’என்று மறுத்தார்.
இந்த நிலையில், தன்னைப்பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் கார்த்திக் குமார். அதன் பின்னரும் கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா பேசிக்கொண்டே இருப்பதால், தனக்கும் தன் கடும்பத்தினருக்கும் இது மன உளைச்சலை கொடுப்பதாக சொல்லி, தன்னைப்பற்றி சுசித்ரா இனி அவதூறாக பேசக்கூடாது. அப்படி பேசினால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தரச்சொல்லி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கார்த்திக்குமார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா பேச இடைக்கால தடை விதித்துள்ளார்.