மாட்டிறைச்சி விவகாரத்தில் சூடான அண்ணாமலை, ’’நான் மாட்டை சாமியாக பார்க்கிறேன். நான் மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன்’’என்றார். அதே நேரம், ‘’மகாத்மா காந்தி ‘என் இந்தியா’வில் பீப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்?’’ என்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கேள்வியையும் எழுப்பினார். சாவி விவகாரம் பீப் விவகாரமாக திசைதிரும்பி இருக்கிறது தமிழக அரசியலில்.
புரி ஸ்ரீகென்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக ஒடிசா பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியின் இந்த தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’’எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்’’ என்றார்.
இதற்கு செல்லப்பெருந்தகை, ‘’காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார். வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை’’ என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், ’’கமலாலயத்தின் முன்பாக எப்போது போராட்டம் என்பதை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார். அதற்குள் அண்ணாமலை சாப்பாடு தயார் செய்யும் போது மாட்டுக்கறியும் சமைத்து வையுங்கள். நாங்கள் அதை விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம். அதனால் கமலாலயத்தில் மாட்டுக்கறி சமைத்து வையுங்கள்’’ என்று இந்த விவகாரத்தில் அண்ணாமலையை கடுமையாக சாடி இருந்தார்.
இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையிடம் மாட்டுக்கறி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘ஒருவர் வீட்டுக்கு விருந்துக்கு போனால் இதை செய்து வை;இதை வறுத்து வை என்று சொல்லமாட்டோம். எங்கள் அலுவலகத்திற்கு யார் வந்தாலும், யார் முற்றுகைக்கு வந்தாலும் வரவேற்கிறோம். நல்ல லஞ்ச் கொடுக்கிறோம். சாப்பிட்டுவிட்டு போங்க’’என்றார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசிய அண்ணாமலை, ‘’உணவு விசயம் அவரவரின் தனிப்பட்ட உரிமை. இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது. மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று நான் யாரையும் சொல்ல மாட்டேன். அது சரியல்ல. அதே மாதிரி மாட்டிறைச்சியை சமைத்து தரச்சொல்லி என்னை கேட்பதற்கு உரிமை இல்லை. மாட்டிறைச்சி கொடுத்தால் நாங்கள் வருவோம் என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் சொல்லுவது மகாத்மா காந்தி சிந்தனையில் இருந்து எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சி மாறியிருக்கிறது என்பது ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேச்சே சாட்சி.
மகாத்மா காந்தி ‘என் இந்தியா’வில் பீப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்? மாட்டிறைச்சி பற்றி மகாத்மா காந்தி பல்வேறு காலகட்டங்களில் என்னென்ன எழுதி இருக்கிறார் என்பது பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒருமுறை படிக்க வேண்டும். நான் மாட்டை சாமியாக பார்க்கிறேன். நான் மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். மாட்டை வைத்து விவசாயம் செய்கிறேன். அதுக்காக மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை சாப்பிடக்கூடாது என்று நான் சொல்லப்போவதில்லை. அது அவரவர் உரிமை’’என்றார்.
சாவி விவகாரம் இப்போது பீப் விவகாரமாக திசை திரும்பி பாஜக – காங்கிரஸ் இடையே சூடு கிளப்பி இருக்கிறது.