135 கி.மீ. வேகத்தில் வீசிய ரெமல் புயலால் மேற்கு வங்கத்தில் 30,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,140 மரங்கள் விழுந்துள்ளன. 317 மின் கம்பங்கள் சரிந்துள்ள. 1.5 கோடி பேர் இருளில் மூழ்கினர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ரெமல் புயல் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் வங்கதேசத்தின் கேபுபாராவுக்கும் இடையே 27.5.2024 இரவு 8.30மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடந்து முடிக்க 5 மணி நேரம் ஆனது.
நேற்று அதிகாலை 5 .30 மணி அளவில் வங்கதேசத்தின் மோங்லா , கேனிங் இடையே படிப்படியாக வலுவிழந்தது.
புயல் கரையைக் கடந்த போது 135 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தின் கரையோர பகுதியில் வசித்த ஒரு லட்சம் பேரும், வங்க தேசத்தில் 8 லட்சம் பேரும் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த ரெமல் புயல் மேற்கு வங்கத்தில் 6 பேரையும், வங்க தேசத்தில் 10 பேரையும் காவு வாங்கியிருக்கிறது.
வங்கதேசத்தில் சூறைக்காற்றுடன் வீசிய மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீடுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் 1.5 கோடி பேர் இருளில் மூழ்கினர்.
மேற்கு வங்கத்தில் 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,140 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 317 மின் கம்பங்கள் சரிந்துள்ளன.
கொல்கத்தாவில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
’’மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், புயல் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து அறிந்துள்ளேன். புயல் பாதித்த இடங்களுக்கு விரைவில் நேரில் செல்வேன். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வேண்டிய உதவிகளை செய்வோம்’’ என்று உறுதி அளித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.