இளையராஜா – வைரமுத்து உறவு மீண்டும் துளிர்க்குமா? மீண்டும் அவர்கள் கூட்டணியில் பாடல்கள் பிறக்குமா? என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வைரமுத்து.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இளையராஜா – வைரமுத்து சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இருவரும் இணைந்தால் மீண்டும் அந்த மாதிரியான நல்ல பாடல்கள் பிறக்கும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இவருமே எதிரும் புதிருமாக உள்ளார்கள்.
இதில் யார் பெரியவர்? என்ற மோதல் இருவரின் பேச்சிலும் அடிக்கடி தென்படுவதுண்டு. இசைதான் பெரிது; தான் தான் பெரியவன் என்கிற ரீதியில் இளையராஜாவின் மேடைப்பேச்சுகள் அவ்வப்போது அமையும். பாடல்கள் காப்புரிமை வழக்கிலும் தான் எல்லோருக்கும் மேலானவன் என்கிற ரீதியில் இளையராஜா சார்பாக அவரது தரப்பினர் வாதம் செய்தது.
இந்த நிலையில்தான் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கேள்வியை எழுப்பி, இசையும் மொழியும் சமமானது என்ற கருத்தினை ஒரு திரைவிழா மேடையில் முன்வைத்தார் வைரமுத்து. அப்போது இதை புரிந்தவன் ஞானி; புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி என்று சொல்லப்போக, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், வைரமுத்துவை ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்க, அவருக்கு எதிர்ப்புகள் எழ, விவகாரம் பெரிதானது.
அப்போதெல்லாம் அமைதியாக இருந்த இளையராஜா, ஒருநாள், நான் இத்தனை நாளும் சிம்பொனி இசையில் ஈடுபாட்டுடன் இருந்தேன். பொதுவாகவே நான் மற்றவர்களை கவனிப்பதில்லை. அது என் வேலையும் இல்லை என்று சொல்லி இருந்தார்.
இந்நிலையில், இது குறித்து கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தபோது, ‘’இந்த செய்திகளை நீங்கள் தவிர்க்க விரும்ப மாட்டேன் என்கிறீர்கள். நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சயையான கருத்தை உண்டாக்க விரும்புவதில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. உண்டாக்கப்படுகின்ற சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன். ஆனால், காலம் சர்ச்சைகளை முடிப்பதற்கு விரும்புவதில்லை என்று தெரிகிறது.
சமூகம் சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டு அதில் குளிர்காய நினைக்கிறது. ஆனால், தனி மனிதர்கள் சர்ச்சைகளை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறார்கள். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன். சர்ச்சைகளோடு விலக நினைக்கிறேன்’’என்றார்.
உங்கள் இரண்டு பேருக்குமான பிரச்சனை முடிந்தால் இன்னும் நல்ல பாடல்கள் கிடைக்கும் என்ற கருத்து இருக்கிறதே? என்ற கேள்விக்கு, ‘’அதன் பின்னரும் நான் 30 ஆண்டுகளுக்கு மேலே கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் பதிவு செய்யக்கூடாதா?’’என்று எதிர்கேள்வி கேட்டவரிடம்,
நீங்கள் இணைந்தால் இன்னும் நல்ல பாடல்கள் கொடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறதே? என்ற கேள்விக்கு, ’’முடிந்த கதை தொடர வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள். இதுகுறித்து பேசுவது பண்பாட்டு ரீதியாக உகந்தது அல்ல என்பது என் கருத்து’’ என்று சொல்லி இளையராஜா உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வைரமுத்து.