ஜூன் -4 தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுகவில் பெரிய பிளவு ஏற்படப்போகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சி தாவப்போகிறார்கள் என்று தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளில் இருந்து பலர் அணி தாவப்போகிறார்கள். பல கட்சி தாவப்போகிறார்கள் என்ற பேச்சு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. .
செங்கோட்டையன், தான் பாஜகவுக்கு செல்லப்போவதாக தொடர்ந்து வந்த செய்திகளை மறுத்து வருகிறார். அதே போன்று எஸ்.பி.வேலுமணியும், தான் பாஜகவில் சேரப்போவதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார்.
அதே போன்று ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் இபிஎஸ் அணிக்கு தாவப்போகிறார் என்றும், ஓபிஎஸ் அணியில் உள்ள பெங்களூரு புகழேந்தி திமுகவில் சேரப்போவதாகவும், பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல்கள் வரும் நிலையில், அதிமுகவில் நடப்பதென்ன? என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.
’’செங்கோட்டையனும், எஸ்.பி.வேலுமணியும் தேர்தல் முடிவுக்கு பின்னர் கட்சியை உடைக்கப்போகிறார்கள் என்று வரும் செய்திகளில் உண்மை இல்லை. ஆனால், மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தோற்றுவிடும். இதனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் பெரிய பிரச்சனை வெடிக்கும். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை மாற்றவில்லை என்றால், தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து அதிமுக காணாமலேயே போய்விடும்’’ என்கிறார் புகழேந்தி.
அவர் மேலும், ‘’20 எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருக்கும் சி.வி.சண்முகம், வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி அடைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான மனநிலையில் உள்ளார். இனிமேலும் அதிமுக தோற்றுக்கொண்டே போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது என்கிற ஆத்திரத்துடன் அதிமுகவில் 10 சீனியர்கள் உள்ளனர். இதனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் மிகப்பெரிய அளவில் பிரச்சனை வெடிக்கப்போவது உறுதி’’ என்கிறார்.
ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம்,ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் மற்றும் நான் உட்பட பலரும் தேர்தல் முடிவுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கலாம்? அணியின் செயலை இன்னும் வேகப்படுத்தலாம் என்றுதான் ஆலோசித்து வருகிறோம். தவிர, ஓபிஎஸ்சை விட்டு விலக்கிச்செல்ல விரும்பவில்லை என்று சொல்லும் புகழேந்தி, நான் திமுக பக்கம் தாவப்போவதாக சொல்வதில் உண்மை இல்லை. ஆனால், திமுவிகவில் சேர எனக்கு அழைப்பு வந்தது உண்மை. அப்படி நான் அங்கே போயிருந்தால் இந்நேரம் நான் திமுகவில் எம்.பி. ஆகி இருப்பேன் என்கிறார்.
அதே நேரம், ஓபிஎஸ் அணியில் மாறுபாடு ஏற்பட்டு, நான் வேறு இடத்திற்கு செல்வதாக இருந்தால், அது திராவிட பாரம்பரியத்தில் இருக்கின்ற கட்சியாகத்தான் இருக்குமே தவிர, மதத்தை கொண்டாடும் எந்த கட்சிக்கும் போகமாட்டேன் என்று போட்டுடைத்து பரபரப்பை கூட்டி இருக்கிறார்.