நரேந்திரமோடியின் பயோபிக்கில் மோடி பாத்திரத்தில் நடிக்க போட்டிருக்கும் அக்ரிமெண்ட் பற்றி சத்யராஜ் மனம் திறந்து பேசினார்.
பெரியாரிஸ்ட் ஆன நடிகர் சத்யராஜ் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக அவரது மகனும், மகளும் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்திருந்தனர் . உடனே, பெரியாரின் தீவிர பற்றாளர் சத்யராஜ், திராவிட இயக்கங்கள் மேடைகள் தோன்றி வரும் சத்யராஜ் எப்படி மோடி பயோபிக்கில் நடிப்பார்? இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்று பலரும் ஏற்க மறுத்தனர்.
சத்யராஜின் மகன், மகளுமே இதை அறிவித்திருந்ததால், நம்பாமலும் இருக்க முடியவில்லை என்று செய்திகள் வந்தமே, ‘’நான் பெரியாரிஸ்ட். அதனால் மோடி பயோபிக்கில் நடிக்க மாட்டேன்’’ என்று சத்யராஜ் சொன்னதாக செய்திகள் வந்தன.
ஆனாலும், நெருப்பில்லாமல் புகையுமோ? என்றும் சந்தேகம் வலுத்தது. சத்யராஜ் மனைவி தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரின் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஆளுங்கட்சியின் ஆசி வேண்டும். அதனால் அவர் மோடி பயோபிக்கில் நடிக்க முடிவெடுத்திருக்கலாம் என்றும் செய்திகள் பரவின.
ரஜினியின் வளர்ச்சி உடனான ஈகோவில் ஷங்கர் தனது சிவாஜி படத்திற்கு வில்லனாக ரஜினியை கேட்டபோது, வேண்டுமென்றே பெரிய சம்பளம் கேட்டு ஓடவிட்ட கதை எல்லாம் மலையேறிப்போய், ரஜினி பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லச்சொல்லி சத்யராஜிடம் சென்ற சேனல் நிருபரிடம், என் பிறந்த நாளுக்கு இதே ரஜினியிடம் போய் நீ வாழ்த்து வாங்கிவிட முடியுமா? என்று கேட்டு ஓட விட்டதாக சொல்லப்பட்ட கதை எல்லாம் மலையேறிப்போய், இப்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சத்யராஜ். அதுமாதிரி எல்லாவற்றையும் மாற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு. அந்த காலம் சத்யராஜையும் மாற்றியிருக்க கூடும் என்று பலரும் பேசி வந்த நிலையில், தான் மோடி பயோபிக்கில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார் சத்யராஜ்.
மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், கருப்பு சட்டைக்காரர் காவி சட்டைக்காரர் படத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி சார்… என்று மோடியை ரொம்பவே மரியாதையாக பேசும்போது அவர் மோடி பயோபிக்கில் நடிக்கிறார் என்பது மேலும் உறுதியானது.
முன்பெல்லாம் நாம் நடித்தால் நாமே சொல்லிவிடலாம். ஆனால், இது கார்ப்பரேட் உலகம். அவர்கள்தான் அறிவிக்க வேண்டும். அப்படித்தான் கார்ப்பரேட்கள் அக்ரிமெண்ட் போடுகிறார்கள். அதை மீறினால் வழக்கு பாயும். என்று கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நழுவினார்.
மீண்டும் மீண்டும் அதையே துருவித்துருவி கேட்க, ‘’மோடி பயோபிக்கை என் நண்பன் மணிவண்ணன் இருந்தால் இயக்கி இருக்கலாம். அதுதான் சரியாக இருக்கும். விஜய் மில்டன் கூட அது மாதிரி இயக்கலாம். இல்லை என்றால் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் இயக்கலாம்’’ என்று மீண்டும் நழுவியவரிடம், மோடி பயோபிக்கில் நடிக்கிறீர்களா? இல்லையா? என்று செய்தியாளர்கள் கேட்க, ‘’அதை அக்ரிமெண்ட் போட்ட அவர்கள்தான் சொல்ல வேண்டும். நான் முந்திரிக்கொட்டி மாதிரி முந்திக்க கூடாது’’ என்றார் சத்யராஜ்.
மோடி பயோபிக்கில் நடிக்கவில்லை என்றால் தான் நடிக்கவில்லை என்று நேரடியாக சொல்லி இருப்பார் சத்யராஜ். இதிலிருந்து ஒன்று புரிந்தது. மோடி பயோபிக்கில் நடிக்க சத்யராஜிடம் அக்ரிமெண்ட் போடப்பட்டிருக்கிறது. அதை அந்த நிறுவனமே அறிவிக்க வேண்டும். அதற்குள் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்க கூடாது என்று நினைக்கிறார் சத்யராஜ். அக்ரிமெண்ட் போட்டிருப்பதால்தான் அதைச்சொல்ல தயங்குகிறார். யார் இயக்குநர் என்பது முடிவாகவில்லையோ என்னவோ? அதனால்தான் அவர் இயக்கலாம் இவர் இயக்கலாம் என்றார்.
மேடையில்தான் அப்படி என்றால், மேடையை விட்டு இறங்கியபோதும் சத்யராஜை விடாத செய்தியாளர்கள், மோடி பயோப்பிக்கில் நடிக்கிறீர்களா? என்று கேட்க, ‘’எதுவாக இருந்தாலும் புரடக்ஷன் தரப்பில் இருந்துதான் அறிவிப்பு வெளியிட வேண்டும். அக்ரிமெண்ட் அப்படி இருக்கிறது’’ என்று மீண்டும் சுற்றி வளைத்து பேசினார்.
விடாமல் அவரை கேள்விகளால் துளைத்தெடுக்க, ‘’மோடியாக நடிக்க யாரும் என்னிடம் கேட்கவில்லை’’ என்று சொல்லி நழுவியவரிடம், கேட்டால் நடிப்பீர்களா? என்று கேட்க, ‘’உள்ளத உள்ளபடி எடுத்தால் நடிப்பேன்’’ என்றே சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார். நடிக்க மாட்டேன் என்று அவர் சொல்லவில்லை.
ஆக, கருப்பு சட்டைக்காரர் காவி சட்டையை அணிய இருக்கிறார்.