அகிம்சை வழியில் போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தி என்று நாடு போற்றி வரும் நிலையில், 1930ம் ஆண்டிலேயே தண்டி யாத்திரை மூலம் உலகின் பல நாடுகளிலும் காந்தியடிகல் அறியப்பட்டவர் என்கிற நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. ‘காந்தி’ படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்திருக்கிறார் என்று உலகத்தின் பலருக்கு தெரிந்திருக்கிறது என்கிற ரீதியில் அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1982ல்தான் காந்தி படம் வெளியானது. ஆனால், 1930ம் ஆண்டிலேயே உலகம் அறிந்த காந்தியடிகள் குறித்து மோடி சொன்னது சர்ச்சையாகி இருக்கிறது. காந்தியவாதிகளை மோடியின் இந்த பேச்சு கொதித்தெழ வைத்திருக்கிறது. குறிப்பாக காங்கிரசார் இதற்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
‘Entire Political Science‘ படிக்கும் மாணவர்தான் சினிமா பார்த்து காந்தியை தெரிந்துகொள்வார் என்று கடுமையாக சாடி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. பிரதமர் மோடி ‘Entire Political Science‘ என்கிற பட்டப்படிப்பு படித்ததாக ஒரு சர்ச்சை இருக்கும் நிலையில் அதை சுட்டிக்காட்டி இவ்வாறு சாடி இருக்கிறார் ராகுல்காந்தி.
’’நாதுராம் கோட்சேவுடன் இணைந்து மகாத்மா காந்தியின் படுகொலையில் ஈடுபட்ட சித்தாந்த முன்னோர்கள் பாபு(காந்தி) வழங்கிய சத்தியப் பாதையை ஒருபோதும் பின்பற்ற முடியாது. இப்போது பொய்ப் பையுடன் கிளம்பி இருக்கிறார்’’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக மோடியை சாடி இருக்கிறார்.
’’காந்தியின் புகழை சீர்குலைக்க வேண்டுமென்று இப்படியொரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அவரின் வரலாற்றைப் பற்றி சிறிதும் அறியாத மோடி’’ என்று கடுமையாக சாடி இருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.