சென்னையில் நடந்த வேட்டைக்காரி இசைவெளியீட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய வைரமுத்து, ‘’கருப்பர் என்ற சாமியின் பெயரால் இந்தப்படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தை இரண்டு சாமிகள் வாழ்த்த வந்துள்ளார்கள். ஒன்று பெரிய கருப்பசாமி, நான் சின்ன கருப்பசாமி. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இந்த கருப்பர் படத்தை வாழ்த்த வந்திருக்கிறோம்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய வைரமுத்து, ‘’எனக்கு முன்னதாக பேசிய அமைச்சர் பெரியகருப்பன், இப்படத்தின் இசையமைப்பாளர் சபேஷ் முரளி என்று சொன்னார். உடனே பலர், நீங்கள் தவறுதலாக சொல்லிவிட்டீர்கள். படத்தின் இசையமைப்பாளர் ராம்ஜி என்று சொன்னார்கள். அதற்கு அமைச்சர், எழுதியவன் தலையெழுத்தை மாற்றினால் நான் என்ன செய்வது? என்று கேட்டு அசரவைத்தார்.
இப்படித்தான் ஆளுநர் விழாவில் ஒரு அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார். மூன்று நிமிடங்கள்தான் அவர் பேச வேண்டும். ஆனால் அவர் 6 நிமிடங்கள் பேசினார். இதனால் கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே சலசலப்பு எழுந்தது. மேடையை விட்டு கீழே இறங்கிய அமைச்சர், தனது நேர்முக உதவியாளரை அழைத்து, 3 நிமிடம்தானே எழுதித்தர வேண்டும். நீ ஏன் 6 நிமிடம் எழுதித்தந்தாய் என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், நான் 3 நிமிடம்தான் எழுதித்தந்தேன். ஆனால், 3 நிமிடங்களின் உரையை ஒன் பிளஸ் ஒன் வைத்திருந்தேன். அதனால் நீங்கள் 2 முறை வாசித்து விட்டீர்கள். என்னை மன்னிக்க வேண்டும் என்று சொன்னார் பாருங்கள்.
எழுதித்தருபவர்கள் சரியாக இருந்தால்தான் கடமை சரியாக நடக்கும் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சியும் ஓர் உதராணம்’’ என்றார்.