ஆர்.எஸ்.எஸ்.தான் பாஜகவை இயக்கி வந்தது. மோடி மற்றும் அமித்ஷாவின் வருகைக்கு முன்பு வரையிலும் இந்த நிலைதான் இருந்தது. இவர்களின் வருகைக்கு பின்னர் நிலை மாறியது. அதனால்தான் மோடிக்கு மாற்றாக தங்களது ஆதரவாளர் நிதின் கட்காரியை பிரதமராக்க காய்நகர்த்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். என்று பாஜக வட்டாரத்தில் இருந்து தகவல் பரவுகிறது.
பாஜகவில் எப்போதுமே ஆர்.எஸ்.எஸ்.க்கு என்று ஒரு தனி மரியாதை இருந்து வந்தது. மோடி, அமித்ஷா இருவரும் பாஜகவில் தலைதூக்கி விட்ட பின்னர், இந்த நிலை அப்படியே தலைகீழாகப்போனது. மோடியும் அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ். எடுக்கும் முடிவுகளை கேட்காமல் சுயமாக முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதனால் மோடி மீதும் அமித்ஷா மீது கடும் அதிருப்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பாஜகவிற்குள் பல வேலைகளை பார்த்து மோடியை புறந்தள்ளிவிட்டு நிதின் கட்காரியை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்காக காய்களை நர்த்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். என்கிறது ‘தி வயர்’ கட்டுரை.
மேலும், மக்களவைத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டால் அந்த நேரத்தில் ஆர்.எஸ். எஸ். தலையீடுகள் அதிகமாக இருக்கும். என்.டி.ஏ.வின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் பாஜகவிற்குள் பல உள் வேலைகளை பார்க்க திட்டமிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். என்கிறது தி வயர்.
மோடி மீதுள்ள வெறுப்பின் காரணமாகத்தான் மக்களவைத்தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை ஆர்.எஸ்.எஸ். இதை புரிந்து கொண்ட மோடி, ஆர்.எஸ்.எஸ். ஐ திருப்திப்படுத்தவே தனது பிரச்சார யுக்தியை மாற்றி இஸ்லாமியர்களை கடுமையான தாக்கி பேசி வருகிறார். ஆனால், இதற்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கொஞ்சம் கூட மயங்கவில்லை.
மோடியை இந்த அளவிற்கு ஆர்.எஸ். எஸ். வெறுக்கும் அதே வேளையில், தீவிர ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான நிதின்கட்காரியை வளர்த்துவிடும் வேலைகளைச் செய்து வருகிறது. கட்சி , அரசியல் எல்லாம் தாண்டி சிறந்த தொழிலதிபராகவும் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ்.சின் கஜானாவாகவும் உள்ளார் கட்காரி. ஆர்.எஸ்.எஸ்.சின் கஜானாவாக இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.ன் பெருங்கனவாக இருப்பதால் கட்காரியை வீழ்த்த துடிக்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும்.
இதனால் கட்காரியை எப்படியும் சாய்த்துவிட, அமித்ஷாவும், மோடியும் அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். கட்காரியின் துறையில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தி அவரின் இமேஜை உடைத்தனர். கட்சியில் அவரை ஓரங்கட்டினர். ’’தனக்கு போட்டியாக வரும் நபர்களை மோடி ஓரங்கட்டி வருகிறார். மோடியும், அமித்ஷாவும் எப்படியாவது கட்காரியை தோற்கடிக்க வேண்டும் என்று முயறன்று வருகின்றனர்’’ என்று மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத்தும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
‘’பாஜகவின் மூத்த தலைவரும், கட்சியின் விசுவாசியுமான நிதின் கட்காரியின் பெயர் பாஜகவின் முதல் பட்டியலில் இல்லை. ஆனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிருபா சங்கர் சிங்கின் பெயர் முதல் பட்டியலில் இருக்கிறது’’ என்று ஆவேசப்பட்டிருந்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
2019 மக்களவைத் தேர்தலில் நிதின் கட்காரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை 2024 தேர்தலில் தரவில்லை மோடியும் அமித்ஷாவும். பாஜகவின் மூத்த தலைவராக இருந்தும் தான் போட்டியிடும் தொகுதி தவிர மற்ற தொகுதிகள் எங்கிலும் சென்று கட்காரி பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பளிக்கவில்லை. நாக்பூரில் நடந்த பாஜக தலைவர்கள் கூட்டங்களிலும் கட்காரி பங்கேற்க வாய்ப்பளிக்கவில்லை. பாஜகவின் போஸ்டர்களிலும் கட்காரியை புறக்கணித்துள்ளனர்.
நாக்பூரில் மூன்றாவது முறையாக போட்டியிடும் கட்காரிக்கு பாஜக பிரமுகர்கள் யாரும் சரியாக வேலை செய்யவில்லை. கட்காரியை எப்படியும் தோற்கடிக்கச்செய்ய வேண்டும் என்று மோடி, அமித்ஷாவின் தரப்பினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். எப்படியூம் கட்காரியை தோற்கடித்தே தீருவேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் பெருமளவில் செலவு செய்து வருகிறார்.
சிறுமி யோகிதா தாக்ரேவின் மரண வழக்கையும் கையில் எடுக்க நினைக்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும்.
நாக்பூரில் 2009ம் ஆண்டில் மே மாதம் நிதின் கட்காரியின் வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மகனின் காருக்குள் 7 வயது சிறுமி யோகிதா சடலமாக மீட்கப்பட்டார். விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தானாகவே காருக்குள் சென்று பூட்டிக்கொண்டதில், மீண்டும் திறக்க முடியாததால் மூச்சுத்திணறி, துடிதுடித்து இறந்தார் என்றது காவல்துறை. துடிதுடித்து, மூச்சுத்திணறி, வாயில் ரத்தம் வழிந்தது என்று மருத்துவர் அறிக்கை இருந்தால் அது விபத்து என்று சொல்லி மகாராஷ்டிரா குற்ற புலனாய்வுத்துறை இந்த வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், தனது மகளின் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் உள்ளாடையில் ரத்தம் இருந்ததால் சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து போராட, நாக்பூர் நீதிமன்றம் 2012 டிசம்பரில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை கையில் எடுத்தால் கட்காரி காலி என்று நினைக்கிறார்கள் மோடியும் அமித்ஷாவும். இதனால்தான் தனது எதிர்ப்பை ஓங்கி அடிக்காமல், தாங்கி அடித்து வருகிறார் கட்காரி என்று விவரிக்கிறது வயர்.