தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 2000க்கும் மேற்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன என்று சொல்லும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’தினம் ஒரு கொலை அல்லது தாக்குதல் என்கிற நிலை நீடிப்பதால் தென் தமிழகத்தின் மக்களுக்கு இருக்கும் அச்சத்தினை போக்கக்கூடிய வகையிலும் நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையிலும் சிறிது காலத்திற்காகவாவது துணை ராணுவப்படை தென் தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும்’’ என்கிறார்.
2022ம் ஆண்டில் மட்டும் தென் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன என்று சொல்லும் கிருஷ்ணசாமி, ‘’தென் மாவட்டங்களில் 1920க்கு பிறகு தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர் , பல்வேறு இடைநிலைச் சாதி மக்கள் மீது கள்ளர், மறவர், அகமுடையார் பிரிவினரால் ஏவப்பட்ட பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளும் அதன் காரணமாக நடந்த கலவரங்களும், அக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சொந்த வீடு, நிலங்களை விட்டு இடம்பெயரும் சூழல் வந்தன.
இதனால் 1995ல் கொடியங்குளம் கிராமம் போலீசாரால் சூறையாடப்பட்டது. இதனால் 10 ஆண்டுகாலம் தென் தமிழகத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடந்தன. புதிய தமிழகம் எடுத்த முயற்சியால் 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்த தென் தமிழகத்தில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது’’ என்கிறார்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் சாதியக் கொடுமைகளை சினிமாக்கி வரும் இயக்குநர் மாரிசெல்வராஜ், பைசன் படப்பிடிப்பு சம்பந்தமாக தூத்துக்குடி விமானம் நிலையம் வந்தபோது, தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் ஜாதிக்கொலைகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டியதிருக்கிறது? என்னென்ன விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியதிருக்கிறது? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ‘’ இந்த விசயத்தில் அடிப்படையான மாற்றங்கள் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது. மக்களிடையே நிறைய புரிதல்கள் வரவேண்டும். இளையோரிடையே இதுகுறித்த விவாதம் அதிகம் வேண்டும். இதை ஒரே நாளில் மாற்ற முடியாது. காலங்காலமாக புரையோடிப் போயிருக்கின்ற, ஆழமாக தங்கியிருக்கின்ற ஒரு விசயத்தை ரொம்பவே மெனக்கெட்டு மாற்ற வேண்டியதிருக்கிறது.
இதை உடனே ஒரே நாளில் மாற்றும்படியான சூழல் இல்லை. உளவியல் ரீதியாக இந்த பிரச்சனை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டம் போட்டா, திட்டம் போட்டா மாற்றிவிட முடியும் என்று ரொம்ப சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். உளவியல் ரீதியாக ரொம்பவே அழுத்தமாக இருக்கிறது சாதி. இதை அகற்ற எல்லோரும் எல்லா தளங்களிலும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதைச் செய்தால்தான் அடுத்த தலைமுறையாவது ஒரு புரிதலுக்கு உள்ளாகும் தலைமுறையாக இருக்கும்’’ என்கிறார்.