திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி கோவை தொகுதியாகத்தான் இருக்கும். தேர்தலுக்கு பின்னர் தென் தமிழகத்தில் திராவிட கட்சி எம்.பி.க்களே இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் ஏகத்துக்கும் வாய்ச்சவடால் விட்ட அண்ணாமலை எங்கே? என்று தேடுகின்றனர் நெட்டிசன்கள்
மக்களவை தேர்தல் முடிவு வரும்போது நான் இங்கேதான் கோவை தொகுதியில்தான் இருப்பேன் என்று தான் கோவை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையில் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார்.
ஆனால், மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் 40/40 தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சொன்னபடி, நாற்பதும் நமதே! என்று சொல்லி அடித்திருக்கின்றனர்.
கோவை தொகுதியில் அண்ணாமலை தோற்றதால் மட்டன் பிரியாணி கொடுத்து கொண்டாடி வருகின்றனர் திமுகவினர்.
இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடையில் நடந்த பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘’அய்யா இன்றைக்கு நான் சொல்றேன்… இத குறிச்சு வச்சுக்குங்க. தேர்தல் முடிந்த பிறக்கு என்னை கேளுங்க… நானும் எங்கேயும் போகப்போவது கிடையாது. நீங்களும் எங்கேயும் போகப்போவது கிடையாது. தேர்தல் முடிந்தபிறகு வாக்குப்பெட்டி எண்ணும் போது…நான் சொல்கிறேன்.. தென் தமிழகத்தில் ஒரு திராவிட கட்சி எம்.பி. கூட இருக்க மாட்டார். இன்றைக்கு நான் சொல்லுறத குறிச்சு வச்சுக்குங்க. போகுற போக்கில் நான் என்றைக்கும் பேசுறது இல்ல. அரசியல் களத்தை நன்கு ஆராய்ந்து இதை சொல்கின்றேன்’’ என்று பேசி இருந்தார்.
கோவையில் அண்ணாமலை தோல்வி அடைந்திருக்கும் நிலையில், தென் தமிழகத்தில் திராவிட கட்சி எம்.பிக்களே வென்றிருக்கும் நிலையில், அண்ணாமலையிடம், ‘’இதுதானா நீங்கள் ஆராய்ந்து அறிந்த தேர்தல் களம்?’’என்று கேட்க வேண்டும் என துடிக்கின்றனர் நெட்டிசன்கள்.