அதிமுகவுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று அக்கட்சியினரே தேர்தலுக்கு முன்பே கணித்திருந்தனர். அதனால்தான் வாக்குப்பதிவுக்கு பின்னர் மீண்டும் ’ஒன்றுபட்ட அதிமுக வேண்டும்’ என்று குரல் எழுப்பி வந்தனர்.
நினைத்தது மாதிரியே தேர்தல் முடிவுகளில் அதிமுக இதுவரை சந்திக்காக படு தோல்வியை சந்தித்துள்ளது. நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்குகள் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், வேலூர், தேனி, தென் சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக. நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 12 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு 2வது இடத்திற்கு வந்துள்ளது பாஜக.
பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு காரணம் அக்கூட்டணியில் ஓபிஎஸ்சும், டிடிவி தினகரனும் இருந்ததுதான் காரணம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. இதனால் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 9 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்ததால் அவர் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.
இபிஎஸ் -ஓபிஎஸ் -டிடிவி தினகரன் என்று மூன்று திசைகளில் பிரிந்து நின்றதால் வாக்குகள் மூன்றாக சிதறியதால்தான் இந்த படுதோல்வி என்பதை கட்சியினர் உணர்ந்துள்ளனர். கட்சியின் சீனியர்கள் பலரும் இதை உணர்ந்துள்ளனர். அதனால் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சசிகலாவும் குரல் கொடுத்திருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல் விடுத்துள்ளார்.
‘’ஒற்றைக்குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்’’ என்று அதிமுகவினருக்கு தனது தலைமயிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிப்பு செய்துள்ளார்.
அதில் அவர் மேலும், ‘’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’’ என்ற அதிமுகவின் குடும்ப பாடலையும் சொல்லி அழைக்கிறார்.
‘’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே எனும் கழகத்தின் நிறுவனர் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். அம்மா(ஜெயலலிதா) உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும் அவர் ஒப்படைத்துப்போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்’’ என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் பாடும் இந்த அதிமுக குடும்ப பாடலை ரசிப்பாரா இபிஎஸ்?