அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாது நடிகர்களுக்கும் ஐடி விங்க் என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்டது. அதற்காக ஐடி விங்க்கை மட்டுமே நம்பி ஆட்டத்தை இழந்து நிற்கிறது அதிமுக.
ராஜ் சத்யன், சி.டி. நிர்மல்குமார் மற்றும் சவுக்கு சங்கர் உள்ளிட்ட அரசியல் புரோக்கர்களை நம்பி, கட்சியை படுகுழியில் தள்ளி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களவை தேர்தல் படுதோல்வியுடன் 9 தோல்வி எடப்பாடி பழனிச்சாமி என்று சொந்த கட்சியினரே திட்டித்தீர்க்கும் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளனர் அதிமுக ஐடி விங்க் குழுவினர்.
கட்சிப்பணிகளுக்கு ஐடி விங்க் என்பதை உணர்ந்து திமுக முதலில் தகவல் தொழில் நுட்ப பிரிவினை உருவாக்கியது. 2011 சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்து அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, அஸ்பயர் சாமிநாதனை வைத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினை உருவாக்கினார். கடந்த 2012ம் ஆண்டில் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவினை உருவாக்கி, அஸ்பயர் சாமிநாதனை அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு செயலாளராகவும் ஆக்கினார்.
அஸ்பயர் சாமிநாதனின் நியமனம் சசிகலாவுக்கு பிடிக்காமலேயே இருந்து வந்த நிலையில், கட்சிக்குள் சில உள்ளடி வேலைகளையும் செய்கிறார் அஸ்பயர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், 2016ம் ஆண்டில் செயலாளர் பதவியில் இருந்து அஸ்பயர் சாமிநாதன் விடுவிக்கப்பட்டார். அவ்வாண்டியின் இறுதியில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தபோது, ஓபிஎஸ் பக்கம் நின்று அவரது தரப்புக்கு தகவல் தொழில்நுட்ப வேலைகளை செய்ய ஆரம்பித்தார் அஸ்பயர்.
ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி கிடைத்தது அஸ்பயருக்கு. இதன் பின்னர் அவர் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், 2020ல் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் யாருக்கும் மாநில அளவில் பொறுப்புகள் இல்லை என்று சொல்லி அஸ்பயரின் மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின்னர் சென்னை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு மட்டும் அஸ்பயர் தலைமை வகித்து வந்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும், ’’ஜெயலலிதா போல் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இல்லை. தொலைநோக்குப் பார்வையில் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற சிந்தனையும் அக்கறையும் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரிடமும் இல்லை. அதை எடுத்துச்சொன்னாலும் இருவரும் கேட்பதாக இல்லை. தோல்வி குறித்து அவர்கள் ஆராய்வதாக இல்லை. அதனால் இனிமேல் அதிமுகவில் வேலை செய்ய விருப்பம் இல்லை’’ என்று சொல்லி, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அஸ்பயர்.
இதன் பின்னர் 2023ல் அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி புதுப்பிக்கப்பட்டது. இந்த அணியை 12 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக நிர்வாகிகளை நியமித்தார் இபிஎஸ். சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட உரசலால் தமிழக பாஜகவின் தகவல் தொழில் நுட்ப அணி தலைவராக இருந்த சி.டி.நிர்மல்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுக பக்கம் சாய்ந்தார். அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியின் இணைச்செயலாளர் ஆனார். பாஜகவில் செய்த வார் ரூம் வேலைகளையே அதிமுகவிலும் தொடர்கிறார் நிர்மல்குமார். பாஜகவின் நிறம் வேறு திராவிட கட்சிகளின் நிறம் வேறு. இதை கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் பாஜகவின் நிறத்திலேயே அதிமுகவையும் நிர்மல்கொண்டு போவது அக்கட்சிக்கு படு பாதகமாக அமைந்திருக்கிறது.
சவுக்கு சங்கர் உள்ளிட்ட அரசியல் புரோக்கர்களும் அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியில் பங்காற்றி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தங்களது கட்சிக்கு நேரும் சிக்கல்களை சரி செய்வதற்கும், சமூக வலைத்தளங்கள் மூலம் கட்சியை வளர்த்தெடுக்கவும் மட்டுமே அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி இயங்கி வந்த நிலையில் , ’சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்தாலே போதும். அதுவே வெற்றிக்கு வித்திடும்’ என்று இபிஎஸ்சை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள் ராஜ் சத்யன், சவுக்கு சங்கர் உள்ளிட்டோர். அதனால்தான் நடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மக்களுடன் நேரிடையே களத்தில் நிற்கும் அணிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை விட , தகவல் தொழில் நுட்ப அணிக்கே அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறார் இபிஎஸ்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் அரசியலையே, அதில் உலவும் பிரச்சனைகளையே மக்கள் பிரச்சனைகளாக நினைத்துக்கொண்டு இபிஎஸ்சை செயல்பட வைத்துள்ளனர்.
அதனால்தான் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் பிரச்சனைகளை எதையும் பேசாமல் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கை வைத்தே பிரச்சாரத்தை ஓட்டினார் இபிஎஸ். ஜாபர் சாதிக் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்தது. அதற்காக இதையே கள அரசியலிலும் பேசி திமுகவுக்கு எதிரான மக்களை திசை திருப்ப முயன்றார் இபிஎஸ். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட சொந்த கட்சியின் நிர்வாகிகளே போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருக்கும் நிலையில் ஜாபர் சாதிக் விவகாரத்தை மட்டுமே பெரிதாக வைத்து இபிஎஸ் பேசி வந்ததை சொந்த கட்சியினரே அவ்வளவாக ரசிக்கவில்லை.
ஜாபர் சாதிக் விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கிய சவுக்கு சங்கரே கஞ்சா வழக்கில் சிக்கியதையும், அவரைக்காப்பாற்ற அதிமுக நிர்வாகிகளே போராடியதையும் அதிமுகவினருக்கே சகிக்க முடியவில்லை.
தவிர, ராஜ் சத்யன், சவுக்கு சங்கர் கொடுத்த ஆலோசனையில் பிரச்சார கூட்டங்களில் வீடியோ காட்டி இபிஎஸ் பேசியதும் மக்களிடம் எடுபடவில்லை.
பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று உதட்டளவில் சொன்னாலும் மனதளவில் பாஜக கூட்டணியில் இருப்பதால்தான், பாஜகவை விமர்சித்து பிரச்சாரம் செய்யவில்லை அதிமுக என்பதையும் மக்கள் கவனித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக என்பது கொஞ்சம் கூட ஒத்துவராத ஒரு கட்சி. இது தெரிந்திருந்தும் பாஜக விலகல் போல் காட்டி அதிமுக ஆடிய கள்ள நாடகத்தையும் மக்கள் உணர்ந்ததால் அதிமுக மேல் தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறவே அதிமுக இந்த கள்ள ஆட்டத்தை ஆடுகிறது என்பதை உணர்ந்த அம்மக்கள் அதிமுகவை புறக்கணித்துவிட்டனர்.
மக்களவை தேர்தலை பொறுத்தவரைக்கும் தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தின்படி பாஜகவை திமுக கடுமையாக எதிர்த்ததை, தங்கள் எதிரியை எதிர்க்கும் சரியான கட்சி என்று தமிழர்கள் மகிழ்ந்தனர். அதனால்தான் புதுச்சேரி உள்பட40/40 வெற்றியை தந்துள்ளனர்.
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்காக எஸ்.பி.வேலுமணியும், அவரது ஆதரவாளர்களும் விழுந்து விழுந்து வேலை செய்ததை கண்டு சொந்த கட்சியினரே நொந்து போயினர். தேர்தலில் கடைசி மூன்று நாட்களில் கோவையில் பாஜகவை வெற்றி பெற வைக்க போராடியிருக்கிறது வேலுமணி டீம். பல இடங்களில் பாஜக அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகவே வேலுமணி டீம் வாக்கு சேகரித்திருக்கிறது.
பாஜகவின் பூத் ஏஜெண்டுகளாகவும் வேலுமணி டீம் அமர்ந்திருந்தனர் என்று பலரும் இபிஎஸ்சிடம் புகார் வாசித்திருக்கின்றனர். அதனால்தான் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அண்ணாமலையோ 4,50,132 வாக்குகளை பெற்றுள்ளார். அண்ணாமலை பெற்ற முக்கால்வாசி வாக்குகள் அதிமுகவின் வாக்குகள் என்று அக்கட்சியின் சீனியர்கள் பலர் இபிஎஸ்சிடம் குமுறி இருக்கின்றனர்.
கோவையில் மட்டுமல்லாது பல தொகுதிகளிலும் வேலுமணி டீம் பாஜகவுக்கு வேலை பார்த்திருக்கிறது. இதனால் அதிமுகவின் வாக்குகளில் பெரும்பான்மையானது பாஜக பக்கம் போயிருக்கிறது. அதனால்தான் 12 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக 2வது இடத்திற்கு வந்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களையும், தகவல் தொழில்நுட்ப அணியினையும், அரசியல் புரோக்கர்களையுமே நம்பி, சொந்த கட்சியினரின் விருப்பு,வெறுப்புகளையே அறியாமல் கட்சியின் பொதுச்செயலாளரே நடந்துகொண்டதால், ’தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி ’ என்பது மாதிரி அதிமுக வேட்பாளர்களும் கட்சியினரை மதிக்கவேயில்லை. இதனால் பெரும்பாலான அதிமுகவினர் வாக்குச்சாவடி பக்கமே தலைகாட்டவில்லை.
இபிஎஸ்சின் இந்த தவறான முடிவினால் முப்பது வருடங்கள் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக கோலோச்சிய அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் 4வது இடத்திற்கும், 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், வேலூர், தென் சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. அதிலும் கன்னியாகுமரியில் வெறும் 41,393 வாக்குகளை மட்டுமே பெற்று படு மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது அதிமுக.
அதிமுகவின் இந்த படுதோல்வி கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவை வீழ்த்தி பாஜக முன்வந்திருப்பது தமிழகத்திற்கு ஆரோக்கியமான விசயம் அல்ல என்பதால் அதிமுகவின் இந்த படுதோல்வியை மதிமுகவும் ரசிக்கவில்லை. அதனால்தான் ‘’அடித்துக்கொண்டாலும் திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் மாதிரி. அதிமுகவின் தோல்வி கவலையளிக்கிறது’’ என்கிறார் துரை வைகோ.