முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘பங்குச்சந்தை உச்சம் தொடும்’ என்று பிரதமரே மார்க்கெட்டிங் செய்தார். இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. மோடி மற்றும் அமித்ஷாவின் திட்டமிட்ட சதி என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி ஆவேச பாய்ச்சலை காட்டியிருக்கும் நிலையில், முதலீட்டாளர்களை அச்சுறுத்த ராகுல் சதி செய்கிறார் என்று பாஜக எதிர்பாய்ச்சலை காட்டுகிறது.
கடந்த மே13ம் தேதி அமித்ஷா, ‘’ஜூன் 4ம் தேதி அன்று நடைபெறும் மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக 400 இடங்களை பெற்று அபார வெற்றியை பெறும். இதையடுத்து பங்குச்சந்தை புதிய உச்சம் தொடும் . அதனால் பங்குகளை வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்ற பேசினார். அதன்பின்னர் மே10 அன்று பேசிய பிரதமர் மோடி, ‘’ஜூன்4ம் தேதி பங்குச்சந்தை புதிய உச்சம் தொடும்’’ என்றார்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் பங்குச்சந்தை உச்சம் தொடும் என்று பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொன்னது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதன் பின்னர் ஜூன்1ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பாஜக கூட்டணி 350 முதல் 415 இடங்கள் பெறும் என்று சொல்லி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இவை கருத்துக்கணிப்புகள் அல்ல பாஜகவின் கருத்து திணிப்புகள் என்று இந்தியா கூட்டணி கட்சியினர் சொல்லி வந்தாலும் ஜூன்2ல் மோடியும், அமித்ஷாவும் சொன்னபடியே பங்குச்சந்தை புள்ளிகள் திடீரென்று புதிய உச்சத்தை தொட்டது.
ஜூன்2ல் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை ஜூன்4ல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்து, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறப்போகும் நிலையில் இருந்தபோது திடீரென்று பங்குச்சந்தை வீழ்ந்தது. 425.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பங்குச்சந்தை மூலதனம் 395.99 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டே தாங்கள் சொன்னபடி, தங்கள் விருப்பப்படி கருத்துக்கணிப்பை வெளியிடவைத்து அதன் மூலம் பங்குச்சந்தையில் சதி செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. திரிணாமுல் காங்., எம்.பி. சாகேத் சோகலே, ‘’தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர் களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் கருத்துக்கணிப்பு மோசடி உள்ளது. இந்த மோசடியை விசாரிக்க வேண்டும்’’ என்று செபி தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்த குற்றச்சாட்டை சொன்னதும் தற்போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.
நேற்று (6.6.2024) அவசர அவசரமாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல்காந்தி. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
”தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் முன்கூட்டியே மோடியும், அமித்ஷாவும் அறிந்திருந்த போதிலும், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும், பங்குச்சந்தை புதிய உச்சம் தொடும் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தனர். ஜூன் 4ம் தேதிக்கு முன்ன பங்குச்சந்தைகளில் அதிக முதலீடு செய்யும் படியும் இவர்கள் இருவரும் ஆலோசனை கூறி வந்தனர். அவர்கள் சொன்னது மாதிரியே இதுவரையிலும் இல்லாத வகையில் பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டது.
ஜூன் 4ல் அப்படியே மிகப்பெரிய சரிவை சந்தித்தது. பங்குச்சந்தை பலமடங்கு உயர்ந்ததும் ஏராளமான சிறிய முதலீட்டாளர்கள் முதலீட்டை செய்திருந்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளில் 473 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 394 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. இதனால் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’’என்று சொன்ன ராகுல்,
’’பங்குச்சந்தையில் லாபம் ஈட்டும் நோக்கிலேயே கருத்துக்கணிப்பு திணிக்கப் பட்டுள்ளது. போலியான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டவர்களுக்கும், கருத்து கணிப்பு வெளியிடுவதற்கு ஒரு நாள்முன்பாக முதலீடு செய்து அதன் மூலம் அதிக லாபம் ஈட்டியிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பாஜகவுக்கு உள்ள தொடர்புகள் என்ன? ’’என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், ‘’ஏற்கனவே பங்குச்சந்தையில் பங்குகளை போலியாக உயர்த்தி காட்டிய முறைகேடின் புகார் செபி விசாரணையில் இருக்கின்ற நிலையில், குறிப்பிட்ட அந்த தொழில் நிறுவன குழுமத்தின் ஊடகத்திற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பேட்டி அளித்து, அப்பேட்டியில் பங்குச்சந்தை புதிய உச்சம் தொடும் என்று சொன்னது ஏன்? பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் 5 கோடி குடும்பத்தினருக்கு , பிரதமர் மோடியும் அமித்ஷாவும் குறிப்பிட்ட அந்த முதலீட்டு ஆலோசனையை அளித்தது ஏன்?’’ என்ற கேள்வியினையும் முன்வைத்திருக்கிறார்.
இது மிகப்பெரிய ஊழல் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சொல்லி இருக்கும் ராகுல்காந்தி, மோடி, அமித்ஷா உள்பட இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
‘’பங்குச்சந்தையில் ஏற்பட்டது வளர்ச்சி அல்ல; வீக்கம்’’ என்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது பாஜக. ’’முதலீட்டாளர்களை அச்சுறுத்த ராகுல் சதி செய்கிறார்’’ என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மறுத்துள்ளார். அவர் மேலும், ‘’30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்பது பங்கு வர்த்தகத்துடன் தொடர்புடையது அல்ல. இதை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார் ராகுல்’’ என்கிறார்.
வாக்கு எண்ணிக்கை நாளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக முடிவுகள் வரத்தொடங்கிய நிலையில் பங்குச்சந்தை சரித்தது. மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததும் பங்குச்சந்தை முந்தைய உச்சத்தை தொடும் என்று உறுதியுடன் சொல்கிறார் பியூஸ் கோயல்.
கடந்த பாஜக ஆட்சியில் இருந்தது போன்று இல்லாமல் காங்கிரஸ் இப்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ளதால் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணாமல் விடாது என்று சொல்லும் பொருளாதார நிபுணர்கள், இது மோடியின் சதியா? ராகுலின் சதியா? என்பதெல்லாம் அம்பலமாகும் காலம் வெகுதூரமில்லை என்கிறார்கள்.