ஒரே முடிவாக இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட நினைத்த சுரேஷ்கோபி எம்.பி.யை கடைசி நேரத்தில் சமாதானப்படுத்தி சரி செய்திருக்கிறார் அமித்ஷா.
பல ஆண்டுகளாக கேரளாவில் கணக்கை தொடங்கிவிடும் பாஜகவின் முயற்சிகள் எல்லாமே பகல் கனவகாக போயின. நடிகர் சுரேஷ்கோபி மூலம்தான் தற்போது கேரளாவில் கணக்கை தொடங்கி இருக்கிறது பாஜக.
கேரளாவில் திருச்சூர் தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்த சுரேஷ்கோபி இப்போது 2024 மக்களவை தேர்தலில் அதே திருச்சூர் தொகுதியில் வென்றிருக்கிறார்.
கேரளாவில் பாஜக கணக்கை தொடங்கி இருப்பது குறித்து பிரதமர் மோடி பெருமைப்பட்டுக்கொண்டார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுரேஷ்கோபியின் மூலம் கேரளாவில் பாஜக கணக்கை தொடங்கினால் அவருக்கு நிச்சயமாக கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பாஜக மேலிடம் உறுதி அளித்திருந்தது என்கிறது சுரேஷ்கோபி தரப்பு.
சுரேஷ்கோபி வெற்றி பெற்றதும் மோடியும் பெருமிதத்துடன் குறிப்பிட்டதால் தனக்கு கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சுரேஷ்கோபியும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார். ஆனால், எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் தவிடு பொடியானது. இணை அமைச்சர் பதவி வழங்கியதால் சுரேஷ்கோபி கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார். இதனால் தான் ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போகிறேன் என்று கேரளா பாஜக வட்டாரத்தில் குமுறியிருக்கிறார்.
இதைக்கேட்டதும் அதிர்ந்து போன கேரளா பாஜக தரப்பு, இன்னும் அமைச்சரவை இலாகாக்களே ஒதுக்கப்படவில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக்கட்சிகளை சரி கட்டி ஆட்சி அமைக்கிறது கட்சி. அதற்குள் இப்படியொரு தலைவலியை தலைமைக்கு ஏற்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத சுரேஷ்கோபி, தான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்புவதால் இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எம்.பியாக மட்டும் இருந்து மக்களுக்கு சேவை செய்யப்போகிறேன் என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.
கேரள அரசியலில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் சுரேஷ்கோபியின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆரம்பமே ஏன் இப்படி? என்று பாஜக மேலிடம் கொதித்தெழ, சுரேஷ்கோபியை சமாதானப்படுத்தி இருக்கிறது பாஜக மேலிடம்.
இன்னும் 4 படங்களில் நீங்கள் நடித்து முடிக்க வேண்டியது இருப்பதால்தான் கேபினெட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று பாஜக மேலிடம் சொல்ல, இந்த விசயம் குறித்து முன்பே பேசி இருக்கிறோம். அது தெரிந்தும்தான் அதனால் ஒன்றும் பெரிதில்லை கேபினெட் அமைச்சர் பதவிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னீர்களே.. இப்போது என்னவாயிற்று? என்று சொல்லி இருக்கிறார் சுரேஷ்கோபி.
கேபினெட் அமைச்சர் பதவி கொடுத்தால் அந்த 4 படங்களில் நடிப்பதையே தவிர்த்து அதை சரி செய்துவிடுகிறோம் என்று சுரேஷ்கோபி தரப்பும் பேசிப்பார்த்திருக்கிறது.
ஆனாலும், நினைத்தது நடக்காமல் போனதால் பதவில் விலகும் முடிவில் உறுதியாக இருந்த சுரேஷ்கோபியை, கடைசி நேரத்தில் அமித்ஷா தொடர்புகொண்டு சமாதானப்படுத்தி இருக்கிறார்.
அதன் பின்னர், ‘’மோடியின் அமைச்சரவையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். நான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை’’ என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார் சுரேஷ்கோபி.