தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டதுமே தமிழக பாஜகவில் மோதல் வெடித்தது.
அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் தமிழிசை ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் தமிழக பாஜக இரண்டாக உடைந்து நிற்கிறது. வார் ரூம் வைத்துக்கொண்டு தனக்கு எதிரானவர்களை எல்லாம் காலி செய்கிறார் அண்ணாமலை என்பதை வெளிப்படையாகவே பேசி எச்சரித்தார் தமிழிசை. இவரை தொடர்ந்து மேலும் பலரும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவில் சந்திபாபு நாயுடுவின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மேடைக்கு சென்ற தமிழிசை, மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா, வெங்கையா நாயுடு உள்ளிட்டோருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு திரும்பினார். அப்போது அவரை அழைத்து அமித்ஷா ஏதோ விளக்கம் கேட்டார். அதற்கு தமிழிசை பதில் சொல்ல, அதில் திருப்தி அடையாத அமித்ஷா, கை விரலை காட்டி எச்சரித்தார்.
பாஜகவில் ரவுடிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்பன உள்பட பாஜகவின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் தமிழிசையை அமித்ஷா எச்சரித்திருந்தாலும், அவரும் அதே தவறை தானே செய்திருக்கிறார். பொதுமேடையில் ஒரு பெண்மணியை, முன்னால் ஆளுநரை எச்சரிக்கிறார் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு முன்னாள் ஆளுநரை பொது மேடையிலேயே அமித்ஷா மிரட்டியது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அமித்ஷாவின் செயலுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
பொதுவெளியில் தமிழ் பெண்ணை மிரட்டும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பூ.நல்லமணி.
முன்னாள் ஆளுநருக்கு நேர்ந்த இந்த அவமதிப்பை எற்றுக்கொள்ள முடியாது என்று கேரள காங்கிரஸும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இதுகுறித்து, ’’தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் ஆளுனருமான மரியாதைக்குரிய தமிழிசை செளந்தரராஜன் அவர்களிடம் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொண்டது அநாகரீகமானது.
மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பெண்மணியான தமிழிசை அவர்களை மிரட்டுவது போல செயல்பட்டது, ஆணாதிக்கமும் சனாதனமும் கூட்டணி சேர்ந்ததாக இருந்தது.
பாஜக எப்போதுமே பெண்களை அதிகாரத்தில் வைத்திருந்தாலும் அடிமையாகவே நடத்தப்படுவார்கள் என்பதற்கு தமிழிசை நல்ல உதாரணம்.
சனாதிபதியாக இருந்தாலும் முர்மு அவர்களை பாஜகவும் மோடி கும்பலும் எப்படி நடத்துகிறது என்பதை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பார்த்தோம். இது தான் பாஜகவில் பெண்களின் நிலை. இதற்கு பெயர் தான் சனாதனம்.
இந்த சனாதனத்தை அழித்தொழிக்க வேண்டுமானால்,பாஜக துடைத்தெறியப்பட வேண்டும். 2026 ல் தமிழ்நாட்டிலும் 2029 ல் இந்தியாவிலும் கட்டாயம் நடந்தே தீரும்.
அதாவது, பயங்கரவாத இயக்கமானஆர்.எச்.எ இல்லாத இந்தியா உருவாகும். அதுவே உண்மையான சமத்துவ இந்தியா. புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியா’’என்று தனது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.