ஒரு எம்.எல்.ஏவால் என்ன அரசியல் மாற்றம் கொண்டு வந்துவிட முடியும்? என்கிற கேள்வியை எழுப்பி, ‘இடைத்தேர்தல்கள் என்பது அவசியமற்றது’ என்ற கொள்கையில் இருந்து வரும் பாமக, தனது கொள்கை முடிவில் இருந்து இப்போது பின்வாங்கியிருக்கிறது. 13 ஆண்டுகளுக்கு பின்னர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பாமக இதுவரையிலும் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. இடைத்தேர்தல்கள் அவசியமற்றது என்ற கொள்கையில் இத்தனை ஆண்டுகளாக உறுதியாக இருந்து வந்தது பாமக. ’மாற்றம் முன்னேற்றம்’ என்பதை முன்னெடுத்துச்சென்ற பாமக, தனது கொள்கையிலும் இப்போது மாற்றம் செய்திருக்கிறது.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ், இடைத்தேர்தல்கள் அவசியமற்றது. பாமக ஒருபோதும் இடைத்தேர்தல்களில் போட்டியிடாது என்று சொல்லி வந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, பாமக ஏன் போட்டியிடவில்லை? என்ற கேள்விக்கு, ‘’சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ. அல்லது 2 எம்.எல்.ஏக்களினால் பெரும்பான்மை இழக்கின்ற சூழலில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தவிர மற்ற நேரங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்றது’’ என்றார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
அவர் மேலும் அதுகுறித்து, ‘’இடைத்தேர்தல் என்பது நேரம் , காலம், பொருளை எல்லாம் வீணடிக்கும் செயல். சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இல்லாமல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மறைந்தால் அக்கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை நியமனம் செய்கின்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை பாமக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறது’’ என்றவர்,
இடைத்தேர்தல்கள் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் முடியும்வரையிலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள்., அமைச்சர்கள் அனைவரும் அத்தொகுதியிலேயே முகாமிட்டு வேலை செய்வர். இதனால் அரசுப்பணிகள் பாதிக்கப்படும். இதைத்தான், ‘’இடைத்தேர்தலை காரணமாக வைத்துக்கொண்டு அமைச்சர்கள் ஒரு மாதத்தினை வீணடிப்பது தேவையற்றது. ஒரு எம்.எல்.ஏவால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் வந்துவிடப்போவதில்லை’’ என்றார்.
அதே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேரத்தில், ‘’பாமகவை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பது தேவையற்றது’’ என்று சொன்ன அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு, சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் அக்கட்சி விரும்பும் நபரையே சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்றார்.
2009ல் பென்னாகரம் இடைத்தேர்தலில்தான் பாமக கடைசியாக போட்டியிட்டது. 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால் அந்த தேர்தலில் அனைத்துக்கட்சிகளும் போட்டியிட்டன. பாமக சார்பில் ஜி.கே.மணி போட்டியிட்டு 41,285 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக வெற்றி பெற்றது. இதன் பின்னர்தான் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்கிற கொள்கையினை கொண்டது பாமக.
பாமகவின் அரசியல் நிலைப்பாடு 13 ஆண்டுகளாக இப்படி இருக்க, இப்போது திடீரென்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் பாமக போட்டுயிடுகிறது என்று பாஜக தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கொள்கை முடிவில் இருந்து திடீரென்று பாமக இப்போது பின்வாங்குவதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒரு எம்.எல்.ஏவால் அரசியல் மாற்றம் நிகழ்ந்துவிடுமா? என்று அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வியை அவரிடமே திருப்பி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பாமக பலமிழந்து வருவதாக அக்கட்சியினரே ஆலோசித்துள்ளனர். அதிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாமகவின் செல்வாக்கு ரொம்பவே சரிந்திருப்பதால் தங்களது பலத்த நிரூபிக்க வேண்டிய நேரத்தில் வருவதால், பாமக வாக்கு வங்கி அதிகம் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு அதை நிரூபிக்கலாம் என்று பாமக முடிவெடுத்துள்ளதாக தகவல்.
2016 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து போட்டியிட்ட பாமக 42 வாக்குகளை பெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் 32 வாக்குகளை பெற்றுள்ளதால், இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தனது பலத்தை கூட்டலாம் என்று கணக்கு போட்டிருக்கிறது பாமக. அதனால்தான் 13 ஆண்டுகால கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறது பாமக என்கிறது தைலாபுரம் வட்டாரம்.