பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா (UAPA) சட்டம் பாய்கிறது. உபா Unlawful Activities Prevention Act எனும் சட்டவிரோத செயல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை என்றும், இராணுவ பலத்தினைக்கொண்டு இந்தியா கைப்பற்றியது என்றும் பேசியிருந்தார். காஷ்மீர் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அப்போது பேசியிருந்தார்.
அருந்ததிராயின் இந்த பேச்சு குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹூசைன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காஷ்மீர் பிரிவினை பற்றி கருத்து தெரிவித்ததால் அருந்ததி ராய், ஷேக் சவுகத் ஷூசைன் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார்.
2010ம் ஆண்டில் பேசிய பேச்சுக்கு 2024ம் ஆண்டில் அதாவது 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்திருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அருந்ததி ராய் எதிர்வினை ஆற்றிவரும் வரும் நிலையில், மோடியின் 3.0 ஆட்சியில் நடவடிக்கை எடுப்பது மர்மமாக உள்ளதாக பலரும் பேசி வருகின்றனர்.
14 ஆண்டுகளுக்கு பின்னர் அருந்ததி ராய் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தி இருக்கிறார்.
’’சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-ல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அருந்ததி ராய் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் Unlawful Activities Prevention Act (UAPA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது மர்மமாக இருக்கிறது’’ என்று சொல்லும் அமைச்சர் மனோ தங்கராஜ்,
‘’ஒருவேளை இது பாஜக அவருக்கு பதவி வழங்கியதற்கு காட்டும் கைமாறா என்பது தெரியவில்லை’’ என்கிறார்.
மேலும், ’’அருந்ததி ராயின் பேச்சு இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 ஆகியவற்றிற்கு முரணாக உள்ளதெனில், அதே வகை குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்? ’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
- மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் இசுலாமியர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்றும் ‘அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்’ என்றும் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் நச்சுமிகுந்த கருத்துக்களை கட்டவிழ்த்துவிட்டனர்.
- நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போல சித்தரித்து காயப்படுத்தினார் பிரதமர் மோடி.
- தமிழ்நாட்டு மக்களின் உணவு கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஒடிசா பாஜக வீடியோ வெளியிட்டது.
இது போன்ற நிகழ்வுகளில் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 கோமாவிற்கு சென்றது ஏன்? எனவும் அவர் கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.
’’ஜனநாயகத்திற்கு எதிரான UAPA சட்டம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று. இச்சட்டத்தின் கீழ் 2019, 2020, 2021 ஆண்டுகளில் மட்டும் 4871 பேர் சிறைப் படுத்தப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்கு உள்ளது. குறிப்பாக Manan Dar என்னும் புகைப்பட நிருபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பத்திரிகையாளர் சித்திக் கப்பான் 2020 முதல் 2023 வரை சிறையில் இருந்தார்.
இந்தியாவில் UAPA சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறை வாசத்திற்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர். எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் மீது தொடுக்கப் பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்!’’ என்று வலியுறுத்தி இருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
அருந்ததி ராய் மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்குரல் இருக்கும் நிலையில், ‘’காஷ்மீரைக் காக்க எண்ணற்றவர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த நாட்டில் நாம் வாழ்கிறோம், “இந்தியா காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது” என பேசிய அருந்ததி ராயின் மீது நடவடிக்கை எடுத்தால் தவறு எனக் கூக்குரல் இடுகிறார்கள்’’ என்று உபா நடவடிக்கை சரிதான் என்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.