பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை பெங்களூரு விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் என்ன சாதாரண மனிதரா? நாட்டை விட்டு ஓடிவிடுவாரா? என்ற கேள்வியை எழுப்பி பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.
பாஜக மூத்த தலைவரும் கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவருமான எடியூப்பா(81), மேலிடத்தில் மீது கொண்ட அதிருப்தியினால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனிக்கட்சி தொடங்கி அக்கட்சியையும் பாஜகவில் இணைத்துவிட்டார். தற்போது எடியூரப்பாவின் மகன் கர்நாடக மாநில பாஜக தலைவராக உள்ளார். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 17 வயது சிறுமி இவரிடம் உதவி கேட்டு சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளிக்க, எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் பாய்ந்தது.
தன் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டினை எடியூரப்பா மறுத்திருந்தார். இதனால் இந்த வழக்கு விசாரணை சிஐடிக்கு மாறியது.
இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், புகாரளித்த சிறுமியின் தாயார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டு வந்தது. எடியூரப்பாவும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில், இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரைக்கும் ஏன் எடியூரப்பா கைது செய்யப்படவில்லை? என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக ஜூன் 12ம் தேதி எடியூரப்பா நேரில் ஆஜராக வேண்டும் என்று சிஐடி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
தற்போது டெல்லியில் இருப்பதால் விசாரணைக்கு ஜுன்12ல் ஆஜராக முடியாது என்றும், டெல்லியிலிருந்து பெங்களூரு திரும்பியதும் ஜூன் 17ம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராவதாகவும் சிஐடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார் எடியூரப்பா.
ஆனால், சொன்ன தேதியில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் எடியூரப்பாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் சிஐடி மனுதாக்கல் செய்ய, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து ஜாமீன் கேட்டு எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி எடியூரப்பாவை ஜூன் 17ம் தேதி வரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தார்.
இந்த உத்தரவின் போது கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா திக்சித், ‘’எடியூரப்பாவை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன சாதாரண மனிதரா? முன்னாள் முதல்வர் அவர். வயதின் காரணமாகவும் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை உடனடியாக கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட முடியாது ‘’ என்று சொல்ல, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி பின்னரே எடியூரப்பா டெல்லி சென்றார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்ல, அவர் என்ன நாட்டை விட்டு ஓடிவிடுவாரா? டெல்லியில்தானே இருக்கிறார்’’ என்று நீதிபதி சொன்னது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எடியூரப்பாவுக்கு சாதகமாக நீதிபதியின் உத்தரவு இருந்தாலும், ஜூன்17ல் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக்கூடாது என்று எடியூரப்பாவுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் கிருஷ்ணா திக்சித்.