தொடர்ந்து 10 தோல்விகளை சந்தித்ததால் 11வது தோல்வியை சந்தித்தால் தனக்கு மிகவும் பின்னடைவாக இருக்கும் என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளாரா என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
அதிமுக முழுவதுமாக எடப்பாடி பழனிச்சாமி வசம் வந்த பின்னர் தொடர்ந்து 10 தோல்விகளை சந்தித்துள்ளது அதிமுக. இதனால் அதிமுகவின் சீனியர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிக்கும் முடிவில் உள்ளதாகவும், ஒன்று பட்ட அதிமுக வேண்டும் என்று பிரிந்து சென்ற அதிமுக குழுவினரை இணைக்க வேண்டும் என்று முயன்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் திமுக, பாமக, நாதக போட்டியிடுகின்றன. 13 ஆண்டுகளாக இடைத்தேர்தலை புறக்கணித்து வந்த பாமக கூட, இழந்தை செல்வாக்கை மீட்க, கட்சியை பலப்படுத்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஆனால், இதே நிலையில் இருக்கும் அதிமுகவோ விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
தொடர் தோல்வி பயத்தில், மக்களவை தேர்தலில் பல இடங்களில் டெபாசி இழந்தது அதிமுக. சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியது நாதக. அதே போன்று விக்கிரவாண்டியில் டெபாசிட் இழப்பு ஏற்பட்டால், பாமக, நாதகவிடம் தோற்று 4வது இடத்திற்கு சென்றுவிட்டால் என்னாவது? இந்த தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என்பதை முன்பே உணர்ந்து, இதன் மூலம் 11 தோல்வி எடப்பாடி பழனிச்சாமி என்று பெயர் வந்து, அது மேலும் தனக்கு சிக்கலாகிவிடும் என்றே தேர்தலை புறக்கணித்துள்ளார் இபிஎஸ் என பேச ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, திமுக ஆட்சியில் இருக்கும் வரையிலும் இடைத்தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெறாது. மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை ஆடு,மாடுகள் போல் பட்டியில் அடைத்து வைத்தது போன்று அடைத்துவிடுவார்கள். இடைத்தேர்தல் நியாயமான ரீதியில் நடைபெறாது என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்ற சொல்லி, தொடர் தோல்வி முகத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.