நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது எடப்பாடி பழனிச்சாமிக்க்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின்னர் மக்களவை தேர்தலோடு சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 10 வது தோல்வி என்பதால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்கிற குரல் எழுந்திருக்கிறது.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க முயன்று வருகின்றனர்.
இதற்கு இபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டோம். அவர்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாக கூறி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஓபிஎஸ் ஒரு சந்தர்ப்பவாதி. அவரை அதிமுகவில் இணைப்பது என்பது நடக்காத விசயம். சசிகலாவையும் அவரது குடும்பத்தினரும் விரட்டியடிக்கப்பட்டவர்கள். அவர்களை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் சொல்லி இருக்கும் நிலையில், ‘’அதெல்லாம் ஒரு குழுவா? டோட்ல போறவங்க வர்றவங்க ஒரு குழு அமைச்சா அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கணுமா?’’ என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கிண்டலடித்துள்ளார் இபிஎஸ்.
இபிஎஸ்சும் அவரது தரப்பும் இப்படி விடாப்பிடியாக இருக்கும் நிலையில், அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பன்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் வரும் 20ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்து வெளியே உள்ள அக்கட்சியின் முன்னாள் சீனியர்கள் முயற்சி ஒருபக்கம் இருக்க, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிடிவாதமாக இருக்க, அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கு, ‘’ஒன்று சேர வேண்டும் சொல்கிறார்கள் என்றால் அவர்களிடம் தலைமை பொறுப்பை தந்துவிட வேண்டும் என்று சொல்கிறார்களா? அதற்கு வாய்ப்பில்லை. அதிமுகவில் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று சேர வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமயை ஏற்றுக்கொண்டால் பரிசீலிப்போம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒருங்கிணை தயாராக இருக்கிறோம் என்று அறிக்கை விட்டால்தான் அதுகுறித்து பரிசீலிப்போம்’’ என்று கறாராக சொல்லி இருக்கிறார் எடப்பாடி தரப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.
ஆனால், சசிகலாவின் எண்ணம் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று இருப்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம் முன்பு மாதிரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமை என்று இருப்பதால் எடப்பாடி தரப்பு போடும் இந்த கண்டிஷனை ஏற்பார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.