ஒடிசாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிஜேடி படுதோல்வி அடைந்திருக்கிறது. 24 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை இழந்திருக்கிறது. தெளிவற்ற பிஜேடியின் சித்தாந்தம், சுய உதவிக்குழுக்கள் மீதான அதீத நம்பிக்கை, அரசியல் சார்பற்ற குழுக்களை அதிகம் நம்பியிருந்தது, தமிழர் வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என எழுந்த குற்றச்சாட்டுகள் போன்றவையே பிஜேடியின் வீழ்ச்சியில் பெரும் பங்களிப்பு செய்கின்றன என்ற விமர்சனங்கள் எழத்தொடங்கி இருக்கின்றன. தி வயர் கட்டுரையிலும் இதுவே பிரதிபலிக்கின்றன.
ஒடிசாவில் நடந்த பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. 2019 சட்டமன்ற தேர்தலில் 113 இடங்களை வென்றிருந்த நிலையில், 2024 சட்டமன்ற தேர்தலில் 51 தொகுதிகளில் மட்டுமே வென்று 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் இழந்திருக்கிறது. நவீன் பட்நாயகக்கின் சொந்த மாவட்டம் கஞ்சத்தில் பிஜேடியின் வாக்கு சதவிகிதம் பெரிதாக சரிந்ததுதான் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலோர மாவட்டங்கள் குறிப்பாக பிஜேடியின் கோட்டைகளான கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், ஜாஜ்பூர் ஆகியவற்றில் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது பிஜேடி.
147 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 இடங்களை வெல்ல வேண்டும் என்கிற நிலையில் 78 இடங்களை வென்றது. சுயேட்சைகள் 2 பேர் ஆதரவளிக்க 80 ஆக பலம் உயர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது பாஜக. ஒடிசாவில் கூட்டணி ஆட்சியில் மட்டுமே அதிகாரத்தை அனுபவித்திருந்த பாஜக இப்போது தனித்து ஆட்சி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது.
மக்களவை தேர்தலிலும் மோசமான தோல்விதான். பிஜேடியின் பாரம்பரிய கோட்டை மற்றும் கடலோர தெற்கு ஒடிசாவிலும் படு தோல்விதான். கோட்டை காலியானது. சட்டமன்ற தேர்தலில் பிஜேடி வாக்கு வங்கியில் 4% சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலிலும் பிஜேயின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. 2019ல் பெற்ற இடங்களில் 2024ல் பாதிக்கும் மேல் இழந்தது பிஜேடி. 2019ல் 44.71 சதவிகிதமாக இருந்த வாக்கு சதவிகிதம் 40.19 சதவிகிதமாக சரிந்துள்ளது.
மொத்தமுள்ள 21 மக்களவை தொகுதிகளில் 20ஐ பாஜக கைப்பற்றியது. மிச்சமிருந்த 1 தொகுதியும் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் ஆளுங்கட்சியான பிஜேடி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
1997ல் நவீன் பட்நாயக்கால் உருவான கட்சி பிஜூ ஜனதா தளம். 2000ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது. கந்தமால் கலவரத்திற்கு பின்னர் 2009 தேர்தலுக்கு முன்பாகவே 2008ல் கூட்டணியை முறித்துக்கொண்ட போதிலும் கூட வலுவான கட்சியாக இருந்தது பிஜேடி. அதனால்தான் தொடர்ந்து 5 முறை ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது பிஜேடி. 6வது 2024 தேர்தலில் தோல்வியுற்று 24 ஆண்டுகால பிஜேடியின் சாம்ராஜ்யம் சரிவை சந்தித்திருக்கிறது.
முதுமையின் காரணத்தால் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை, பிஜேடியின் அதிகார வர்க்கமாக மாறிய வி.கே.பாண்டியன், பாஜகவின் ‘ஒடிசாவின் பெருமை’ முழக்கம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.
பிஜேடியில் 40 நட்சத்திர பிரச்சாரகர்கள் இருந்தும் மாநிலம் முழுவதிலும் நவீன் பட்நாயக் மற்றும் வி.கே.பாண்டியன் இருவரைத்தவிர பிஜேடி வேட்பாளர்களுக்கு வேறு யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. இதுவும் பிஜேடியின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் கூட நவீன் பட்நாயக்கை அணுக முடியாத அளவிற்கு வி.கே.பாண்டியன் அதிகார மையத்தில் இருந்ததும், ஆட்சி மற்றும் கட்சி அமைப்பு தொடர்பான அனைத்து விசயங்களிலும் நவீன் பட்நாயக்கே செல்வாக்கை செலுத்தி வருகிறார் என்றும், வி.கே.பியை தன் பக்கம் வைத்துக்கொண்டு நவீன் பட்நாயக் பிரச்சாரம் செய்தது கட்சியினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியதும் என கட்சிக்குள்ளேயே புகைச்சல் இருந்ததும், இதையெல்லாம் பாஜக கவனத்தில் எடுத்துக்கொண்டு, பிரச்சாரம் செய்தது.
குறிப்பாக தமிழர் என்பதால் வி.கே.பாண்டியனை அந்நியர் என குறிவைத்து தாக்கி அதில் வெற்றி கண்டிருக்கிறது. நவீன் உடல் நிலை சரியில்லை; அதனால் பிஜேடி ஆட்சிக்கு வந்தால் தமிழரான பாண்டியன் தான் ஒடிசாவை ஆள்வார் என்று ஆக்ரோஷமாக பேசியே ஒடிசாவில் வென்றிருக்கிறது பிஜேபி.
பிஜேபியின் இந்த ஆக்ரோஷ முழக்கங்களுக்கு முன்னால் பிஜேடியின் வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் எடுபடாமல் போய்விட்டன.
பிஜேடியை நவீன் பட்நாயக் உருவாக்கியபோது பிரசன்னா ஆச்சார்யா, ஏ.யு.சிங்தேயோ, பிஹோய் மொஹபத்ரா போன்ற தலைவர்கள் ஆரம்ப வளர்ச்சியில் பங்களித்துள்ளனர். இவர்களை எல்லாம் பல ஆண்டுகளாக ஓரங்கட்டிவிட்டு, தான் தான் கட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் நவீன் பட்நாயக்.
பிஜேடியில் நீண்ட காலமாக உட்கட்சி தேர்தல் நடைபெறாததால் பல கட்சி பதவிகள் காலியாகவே உள்ளன. அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக நவீன் பட்நாயக்கே கட்சியின் தலைவராக உள்ளார். ஆட்சியிலும் கட்சியிலும் இப்படி நவீன் பட்நாயக்கே அதிகாரம் செலுத்துவதால் கட்சிக்குள் முணுமுணுப்புகள் இருந்துள்ளன. இவை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளன.
நவீன் பட்நாயக்கின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பியாரிமோகன் மொஹபத்ரா ஆட்சியை கவிழ்க்க சதி முயற்சியில் ஈடுபட்டார் என்று, அந்த சதியை முறியடித்தார் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை பெற்று அவரின் தனிச்செயலாளர் ஆனார். அதன் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகார உச்சத்திற்கு சென்றார். இது கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற சித்தாந்தத்தில் நிறுவப்பட்ட பிஜேடியின் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கருத்தியல் தெளிவற்ற தன்மை இருந்ததும் தோல்விக்கு காரணம் என்கிறது தி வயர்.
பாஜகவின் கூட்டணியை முறித்துக்கொண்டாலும் பாஜகவின் சித்தாந்தை கைவிடவில்லை பிஜேடி. குடியுரிமை திருத்தச்சட்டம், 370வது பிரிவு ரத்து, டெல்லி என்சிடி மசோதாவை ஆதரித்தது போன்றவையும் பிஜேடியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
அஸ்வினி வைஷ்னாவை நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்ப பாஜகவுக்கு உதவியது பிஜேடி. இதனால் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது பிஜேடி. கூட்டணியின் இல்லாவிட்டாலும் பிஜேடியும் பிஜேபியும் கூட்டணி அமைக்க முயற்சித்தது, திரைமறைவில் இரு கட்சிகளும் கூட்டணியில் இருக்கின்றன என்ற பேச்சுக்கள் எல்லாம் மக்களிடையே பிஜேடி மேல் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிஜேடிக்கு என்று தனித்துவமான, உறுதியான சித்தாந்தம் இல்லை என்று மக்களிடையே நம்பிக்கையை பெற முடியாமல் போனது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்தான் பல சந்தர்ப்பங்களில் பிஜேடிக்கு பலமாக அமைந்திருக்கிறது. மகிளா சங்கே என்று 70 லட்சம் பெண்கள் சுய உதவிக்குழுக்களில் உள்ளனர்.
ஒடிசாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ’மிஷன் சக்தி’ என்று தனி துறை அமைத்தார் நவீன்பட்நாயக். இதன் மூலம் கிராமங்கள், நகரங்களில் செயல்பட்டு வந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த மகிளா சங்கங்கள் அரசு திட்டங்களையும் கொள்கைகளையும் அடித்தட்டு மக்களுக்கும் குறிப்பாக பெண்களின் வாக்கு தளத்திற்கும் கொண்டு செல்ல பிஜேடியின் சக்தியாக இருந்தனர். கட்சி நடத்தும் எந்த நிகழ்ச்சிலும் கூட்டமாக கலந்துகொண்டு கட்சி தலைவர்களை ஆதரித்தனர். பிஜேடியின் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான கட்சியின் பணிகளில் இந்த மகளிர் குழுக்கள் முக்கிய பங்காற்றினர். துண்டு பிரசுங்கள் விநியோகித்து வாக்கு சேகரித்தனர். தங்கள் நெட் வொர்க்கை பயன்படுத்தி பணம் விநியோகமும் செய்தனர். இதற்காக பயிற்சி அளிக்க அங்கன்வாடி மையங்களில் அடிக்கடி கூட்டங்கள் நடந்தன. ஆனால், தேர்தலில் பிஜேடி வெற்றி பெற்றால் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடன் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது மகிளா சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மிஷன் சக்தியின் பொறுப்பாளர் வி.கே.பாண்டியனின் மனைவியான சுஜாதா கார்த்திகேயன் தேர்தலின் போது இடமாற்றம் செய்ததால் பிஜேடியின் ஆதரவு கட்டமைப்பு முற்றிலுமாக உடைந்தது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விவகாரத்தில் சுஜாதா தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாஜக குற்றம்சாட்டியது. அரசிடம் கடன் பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பிஜேடிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அதிகாரத் தோரணையில் சொன்னதாக பாஜக குற்றம் சாட்டி வந்தது. அதனால்தான் இந்த 2024 தேர்தலில் இந்த சுய உதவிக்குழுக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கு பதிலாக வலுவிழக்கச் செய்திருக்கின்றன.
ஒடியாவின் பெருமையை மீட்டெடுப்பதாக உறுதி அளித்ததும் பாஜகவுக்கு கை கொடுத்திருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்ததும் ஒடியாவின் கலாச்சாரம், ஒடியாவின் அடையாளத்தை பாதுகாக்க பாடுபடுவோம் என்று பாஜகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ஒடிசாவின் பெருமை ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லி பிரச்சாரம் செய்தார் மோடி. ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரும் ஒடியா மொழி, கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒடிசாவின் பெருமையை பாஜக காக்கும். ஆனால், இதை பிஜேடி புறக்கணிக்கிறது என்றே பிரச்சாரம் செய்தனர்.
ஒடியா அஸ்மிதா(ஒடியாவின் பெருமை) ஐ பாஜக மட்டுமல்லாது காங்கிரசும் தேர்தல் திட்டமாக கையில் எடுத்ததை அடுத்து ஒடியா மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கு பாஜகவும் காங்கிரசும் எதுவுமே செய்யவில்லை என்று அவ்விரு கட்சிகளையும் பிஜேடி சாடியது.
ஒடியா மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்திற்காக பிஜேடி முன்னெடுத்தவற்றை எல்லாம் அக்கட்சியின் பிரச்சாரம் செய்தனர்.
2011ல் பிஜேடி அரசுதான் ஒடிசாவில் சரியான உச்சரிப்பிற்காக ஒரிசா என்பதை ஒடிசா என மறு பெயரிட்டது. பிஜேடியின் நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் 2014ல் ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும் கிடைத்தது. 2017ல் பாரம்பரிய அமைச்சரவை அமைத்தது பிஜேடி. இதன்படி பகபத் துங்கிகள் புத்துயிர் பெற்று பூரி பரிக்ரம பிரகல்பா, ஏகாம்ர ஷேத்ரா திட்டம், சமலேய் திட்டம் என பாரம்பரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
சத்யபாடியில் ஒடியா பல்கலைக்கழகம் அமைத்தது பிஜேடி. புவனேஷ்வரின் ஒடியா மொழிக்கான சர்வதேச மாநாடு, ஜேஎன்யு, பிஹெச்யூவில் ஒடியா நாற்காலி அமைக்கப்பட்டது பிஜேடி ஆட்சியில்தான். ஒடியா மொழி மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம், ஒடியா கல்லூரி மாணவர்களின் கல்விக்கட்டணம் தள்ளுபடி திட்டம் கொண்டு வந்தது பிஜேடி என்று ஒடியா மொழிக்காக பிஜேடி செய்தவற்றை எல்லாம் பட்டியலிட்டு, பாஜக ஒடியாவுக்கு என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினர் பிஜேடியினர். ஆனாலும், ஒடியாவின் பெருமை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது நாங்கள் வந்ததும் அதை மீட்போம் என்று சொன்ன பிஜேபியின் பிரச்சாரம் எடுபட்டிருக்கிறது.
வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய கட்சியின் கருத்தியல் தெளிவற்ற தன்மை, மகிளா சங்கங்கள் போன்ற கட்சி சாராத பணியாளர்களை அதிகம் நம்பியதும்தான் பிஜேடியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று தி வயர் சொல்கிறது.
நவீன் பட்நாயக் அரசு மீது பெரிதாக குற்றாச்சாட்டுகள் இல்லாத நிலையில் வி.கே.பாண்டியன் தமிழர், அந்நியர் என்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கான துருப்புச் சீட்டாக பயன்படுத்தி காய் நகர்த்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டது பிஜேபி. நவீன் பட்நாயக்கிற்கு வயதாகிவிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பாண்டியன் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்பிலும் சதி நடந்திருக்கிறது. பிஜேடி வெற்றி பெற்றால் வி.கே.பாண்டியன் தான் ஒடிசாவின் முதல்வர் ஆவார். மண்ணின் மைந்த ஆள்வதற்கு பதிலாக ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதா? என்ற பாஜகவின் பிரச்சாரம் மக்களிடையே எடுபட்டிருக்கிறது.
பாஜகவின் இந்த பிரச்சாரம் பிஜேடிக்கு பாதகமாக அமைந்துவிடும் என்று நினைத்துதான், பாஜக சொல்வது போல் வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல என்று அறிவித்தார் நவீன்பட்நாயக். ஆனால், அவரது சொந்த கட்சியினரே இதை நம்பாமல் போனதுதான் அவரின் துரதிஷ்டம்.
பாஜவின் இந்த யுக்தியால் அக்கட்சிக்கு முன் எப்போதும் இல்லாத வெற்றி கிடைத்திருக்கிறது. பிஜேடியின் தோல்விக்கு தான் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதை உணர்ந்து, அரசு உயரதிகாரியாக இருந்து திடீர் அரசியல்வாதி ஆன வி.கே.பாண்டியன், வந்த வேகத்திலேயே தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று பேசப்பட்டாலும் கூட நவீன்பட்நாயக் முறைப்படி அறிவிக்காததால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவினை எடுத்திருக்கிறார்.
தொடர்ந்து ஐந்து முறை ஆட்சியில் இருந்த அயற்சியும் பிஜேடியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரம், 24 ஆண்டுகால பிஜேடியின் சாம்ராஜ்யம் சரிந்தாலும் மீண்டும் எழ முடியாது என்றில்லை என்கின்றனர்.