கள்ளச்சாராயத்தினால் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், திமுக ஆட்சியில்தான் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்வது போன்று எதிர்க்கட்சிகள் சித்தரித்து வருவதாக திமுக தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
கடந்த 2023ல் மே மாதம் மரணக்கானத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேரும், மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்தனர் . தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், சிறுவங்கூர், மாடூர், சேஷசமுத்திரம் கிராமங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம் கிராமத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் திமுக ஆட்சியை கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர் அதிமுகவினரும் பாஜகவினரும்.
அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலிலும் கள்ளச்சாராய மரணங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் 2001(அதிமுக ஆட்சி)ல் பன்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கண் பார்வையினை இழந்தனர்.
அதே 2001ல் சென்னை அடுத்த செங்குன்றம் கோட்டூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2017(அதிமுக ஆட்சி)ல் தருமபுரி மாவட்டம் எரியூரில் 4 பேர் உயிரிழந்தனர். 2018ல் திருவாரூர், குடவாசலில் ஒருவர் உயிரிழந்தார்.
2020(அதிமுக ஆட்சி)ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டணத்தில் மூவர் உயிரிழந்தனர். அதே 2020ல் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் மூவர் உயிரிழந்தனர்.
2003(அதிமுக ஆட்சி)ல் நாமக்கல் மாவட்டம் போத்தனூர் – தேவராயசமுத்திரம் பகுதியில் 9 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு கிராமத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
கள்ளச்சாராய வழக்கில் அதிமுக பிரமுகர்கள் பலர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். தற்போதும் போலீசில் பிடிபட்டுள்ளனர் அதிமுக பிரமுகர்கள். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் மீது கள்ளச்சாராய வழக்குகள் 30 வழக்குகள் உள்ளன. கல்வராயன் மலையில் 25 ஏக்கர் பரப்பளவில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த சுரேஷை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் நாடு முழுவதிலும் 2,331க்கு மேல் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மோடி, அமித்ஷா பிறந்த குஜராத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் 544 பேர் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்துள்ளனர். பாஜகவின் கோட்டை சொல்லப்படும் உ.பியில் கடந்த 50 ஆண்டுகளில் 104 கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக கர்நாடகாவில் 1981ல் 308 கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2013 ம் ஆண்டு கணக்கின்படி டாப் -5 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க திமுக ஆட்சியில் மட்டுமே கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.