அடிக்கடி ஆடியோ சர்ச்சையில் சிக்கி வரும் பாஜக பிரமுகர் கலிவரதன் தற்போது பெண் ஒருவருக்காக செய்த பஞ்சாயத்து ஆடியோ வெளியாகி அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாமகவில் இருந்தபோது முகையூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் கலிவரதன். பின்னர் பாமகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவரானார்.
பாஜகவில் இணைந்தது முதல் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் இவர் மீது பாலியல் புகார் அளித்தார். கட்சியின் நிர்வாகி ஒருவரின் மனைவி கலிவரதன் மீது கொலை மிரட்டல் புகாரளித்தார்.
தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து பலமுறை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவததாகவும் பாஜக மகளிர் அணியின் பொதுச்செயலாளர் காயத்ரி தலைமைக்கு புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான ஆடியோவில், ‘அண்ணாமலை என்ன கடவுளா?’, கட்சியில் இருப்பவனுக்கு எல்லாம் எந்த பவர் இருக்குது என்று தெரியல.. என்று கட்சி தலைமையை, நிர்வாகிகளை சகட்டுமேனிக்கு திட்டிய ஆடியோ வெளியாகி கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகியிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி அது கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தபால் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் கட்சி நிர்வாகி ஒருவர் சில்மிஷசத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நபரிடம் செல்போனில் பேசி கண்டிக்கிறார் கலிவரதன்.
மாவட்ட தலைவர் என்று கூட கொஞ்சமும் யோசிக்காமல் மரியாதை கொடுக்காமல் பேசுகிறார் அந்த நபர். பெண் பாலியல் புகார் எல்லாம் உன் மேல் இருக்கு. நீ என்கிட்ட சில்மிஷம் பண்ணாதேன்னு பஞ்சாயத்து பேசுறியா?ன்னு எகிறுகிறார். அதற்கு கலிவரதன் ஆபாசமாக பேச, என் அம்மாவை பற்றி அந்த வார்த்தை எப்படி சொல்லலாம் என்று ஆத்திரப்பட்ட அந்த நபர், பதிலுக்கு கலிவரதன் மீது ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்.
ஒரு மாவட்ட தலைவர்கிட்ட பேசுகிறோம்ங்கிற நினைப்பே இல்லாமல் இப்படி பேசுறியேன்னு கலிவரதன் கேட்க, உன் அம்மாவை பற்றி சொன்னா நீ சும்மா இருப்பியா? கிளியனூரில் பசங்க அடித்தபோது நாங்கதான் வந்த தடுத்தோம். நாங்க கொடி பிடிச்சு வளர்த்த கட்சி உனக்கெல்லாம் யாரு பதவி கொடுத்தது என்று ஏகத்துக்கும் அர்ச்சனை செய்ய, போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுகிறார் கலிவரதன்.
இந்த ஆடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாஜக வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.