மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் உடைந்தன. தேசியவாத காங்கிரசில் இருந்து சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் பிரிந்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) என்று பிரிந்தது. அஜித்பவாரின் அணியில் 39 எம்.எல்.ஏக்கள் சென்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமும் பெயரும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு சென்றுவிட்டது. ஆனாலும் மக்களவை தேர்தலில் சரத்பவார், அஜித்பவார் இருவரும் தனித்தனியே போட்டியிட்டதில் சரத்பவார் அணி அதிக இடங்களை வென்றது. அஜித்பவாருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. சொற்ப இடங்களில் போட்டியிட்டும் தோல்வியை தழுவியதால், கட்சியில் பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அதிருப்தியில் உள்ள 22 எம்.எல்.ஏக்களும் மீண்டும் சரத்பவார் கட்சிக்கே திரும்ப இருக்கிறார்கள் என்ற தகவல் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித்பவாருடனான் உறவை துண்டிக்க வேண்டும் பாஜக நிர்வாகிகளும் தங்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம். இதனால், தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித்பவாருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த மாதம் சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், சரத்பவார் தனது அணி சார்பாக ஒருவரை நிறுத்தினால் அவர் வெற்றி பெற மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை இருக்கிறது என்கிற நிலையில்தான் எம்.எல்.ஏக்கள் அணி தாவ முடிவெடுத்துள்ளனர்.
22 எம்.ஏல்.ஏக்கள் சரத்பவார் கட்சிக்கு தாவ இருப்பதை சரத்பவார் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். தங்கள் அணிக்கு வர பலரும் விருப்பம் தெரிவித்து பேச்சு நடத்தி வருகின்றனர் என்றும் அவர் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். 22 பேர் தங்கள் பக்கம் வர நினைத்தாலும் அதில் செலக்ட் செய்து 10 பேரை மட்டுமே தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வார் சரத்பவார் என்கிறார்.
அஜித்பவாரின் அரசியல் செல்வாக்கை குறைக்க நினைக்கிறது பாஜக. இதனால் சட்டமன்ற தேர்தலில் அவரை தனித்து போட்டியிட சொல்லக்கூடும் அஜித்பவார் தரப்பு எம்.எல்.ஏக்கள் நினைக்கின்றனர்.
அஜித்பவார் இருக்கும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் தற்போதைய சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெருவது கடினம் என்பதை உணர்ந்துதான் இப்போதே புத்திசாலித்தனமாக பலரும் அணி தாவ முயல்கின்றனர். ஆனால், அத்தனை பேருக்கும் சீட் தருவதாக வாக்குறுதி அளித்து கட்சியில் சேர்த்தால் ஏற்கனவே இருப்பவர்களுக்கு சீட் கொடுக்கமுடியாது அதிருப்தி நிலவும் என்பதால்தான் 10 பேரை மட்டுமே சரத்பவார் சேர்த்துக்கொள்வார் என்கிறார்.
அஜித்பவாருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியின் காரணமாகத்தான் மகாராஷ்டிராவில் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது என்றும் தகவல்.
திரும்ப வர விரும்புபவர்கள் வரலாம் என்று சரத்பவாரும் சிக்னல் கொடுத்திருக்கிறார். சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும், அஜித்பவார் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்கிறார்.
ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இருந்தும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 3 எம்.எல்.ஏக்கள் தாவ முடிவெடுத்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் திகுதிகுவென்றிருக்கிறது.