விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியின் வாக்குகளை பெற திமுக, பாமக, நாதக கட்சிகள் விரும்புகின்றன.
சட்டப்பேரவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு நாதக ஆதரவு தெரிவித்தது. அறிக்கை மூலமாக சீமான் ஆதரவு தெரிவித்த நிலையில், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாதக நிர்வாகிகள் உண்ணாவிரத மேடைக்கே சென்று ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நாதக கணக்கு போடுவதாக பேச்சு எழுந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள் மற்றும் போஸ்டர்களில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை போட்டு, அதிமுகவினர் பாமக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
அதிமுக தொடங்குவதற்கு முன்பு திமுகவில் இருந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்குத்தான் கிடைக்கும் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
இதனால் அதிமுக ஆதரவு யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதில், பாமகவுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ரகசிய உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்.
மக்களவை தேர்தலின் போது அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்வதாக இருந்தது. அதிமுக நிர்வாகி சி.வி.சண்முகம் இரண்டு முறை பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தபோதும் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டது பாமக.
நடந்து முடிந்த தேர்தலில் பாமக கூட்டணியில் இல்லாததால் வெற்றி வாய்ப்பு இழக்க நேரிட்டது என்று அதிமுக நினைக்கிறது. மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணமான பாமகவுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று நினைக்கிறது அதிமுக.
அதே நேரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு ஆதரவு அளித்தால் பாமகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்து வாக்கு வங்கி உயர்ந்துவிடும். அப்புறம் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வந்தால் இதை காரணம் காட்டி அதிக இடங்களை கேட்பார்கள். அதனால் பாமகவுக்கு ஆதரவளிக்க கூடாது என்று விக்கிரவாண்டி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கும், அவர்கள் மூலமாக தொண்டர்களுக்கும் ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.