2024 இளங்கலை நீட் தேர்வை ரத்து செய்வது கடினம் என்றாலும், மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்ய தேர்வு ரத்து அவசியம் என The Times of India கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தேர்வு முறைகேட்டின் சட்ட வழக்காக மாறியுள்ள நீட் தேர்வில் மாணவர்களின் பொது நம்பிக்கையை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகியுள்ளது.
2024 இளங்கலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது அசாதாரணமான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களை பற்றி மட்டும் கவனத்தில் கொள்ளாமல், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
- கடந்தாண்டு வெறும் 2 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்தாண்டு 67 பேர் முழு மதிப்பெண்ணான 720-ஐ பெற்றுள்ளனர்
- கடந்தாண்டு 294 தேர்வர்கள் மட்டுமே 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 1,770 பேர் பெற்றுள்ளனர்.
- 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்றவர்கள் கடந்தாண்டு வெறும் 6,803 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு சுமார் 21,724 பேராக உயர்ந்துள்ளது.
- 600 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 2023-ல் 28,629-ஆக இருந்த நிலையில், அது இந்தாண்டு 80,468-ஆக உயர்ந்து இருக்கிறது.
அதிக மதிப்பெண்கள் பெறுவதில் இதுவரை இல்லாத இந்த அதீத உயர்வு மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
தேர்வெழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்ய 2024 நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று The Times of India வலியுறுத்தியுள்ளது
தேர்வு எழுதும் போது நேரத்தை இழந்த அல்லது இடையூறுகளை சந்தித்த மாணவர்களுக்கு ‘கருணை மதிப்பெண்கள்’ வழங்க வேண்டிய எந்த விதியும் NTA வகுத்ததில்லை. ஆனால், 1,563 தேர்வர்களால் கருணை மதிப்பெண்களை எப்படி பெற்றார்கள் என்பதும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
கருணை மதிப்பெண்கள் மூலம் 719 மற்றும் 718 மதிப்பெண் பெற்றிருப்பது NTA-வின் மதிப்பெண் விதிகளின் படி சாத்தியமற்றது.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு மாநிலம் மட்டுமல்ல, பல வட மாநிலங்கள் இந்த விசாரணை வலையத்திற்குள் சிக்கியுள்ளன.
குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதி இருப்பதும் கேள்வியை எழுப்புகிறது. வெவ்வேறு மாநில மாணவர்கள் கோத்ரா தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதியது தற்செயலானது அல்ல.
NTA அதிகாரிகளின் உதவியின்றி இது நடக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் இன்னும் விசாரணை வளையத்துக்குள் வரவில்லை என்றும் The Times of India கூறியுள்ளது.
நீட் தேர்வு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அனைத்து தேர்வர்களுக்கும் நீதியை உறுதிப்படுத்தவும் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு தேவை என The Times of India தெரிவித்துள்ளது
TOI Article Link: Bite The Bullet Milords, Scrap This Edition Of NEET