ஹத்ராஸ் சம்பவத்தில் 121 பேர் பலியாகி இருக்கும் நிலையில் சம்பவம் தொடர்பான எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் இடம்பெறாமல் உள்ளதால், பாபாவை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறதா யோகி அரசு? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த 2ம் தேதி அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் புல்ராய் கிராமத்தில் போலே பாபா சாமியார் எனும் நாராயண் ஹரியின் சொற்பொழிவு கூட்டம் நடந்தது. சுமார் 2 .5 லட்சம் பேர் இந்த கூட்டத்திற்கு திரண்டு வந்துள்ளனர். பிற்பகல் 12.30 மணிக்கு மேடைக்கு வந்த போலே பாபா, மதியம் 3 மணியளவில் சொற்பொழிவை முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கி எட்டா நகருக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்திருக்கிறார்.
அப்போது போலே பாபாவின் காலைத்தொட்டு வணங்கி அவரின் காலடி மண்ணை எடுப்பதற்காக மக்கள் முண்டியடித்து சென்றுள்ளனர். பாபா காரில் ஏறி புறப்பட்டபோது, அவர் கார் டயரின் மண்ணை எடுக்க ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துள்ளனர்.
இதைப்பார்த்த பாபாவின் பாதுகாவலர்கள் தடியுடன் மக்களை தடுத்து நிறுத்தி விரட்டி இருக்கிறார்கள். இதில் அங்கிருந்து தப்பி ஓடியபோது கீழே விழுந்தவர்கள் மீது ஏறி பலரும் மிதித்துக்கொண்டு ஓடியதால் அதில் மிதிபட்டு மூச்சுத்திணறி பலர் உயிரிழந்துள்ளனர். இதிலிருந்து தப்பிக்க காலி மைதானம் நோக்கி மக்கள் ஓடியபோது சேற்றில் சறுக்கி பலர் விழ, அவர்களையும் மிதித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். இதில் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் என்று 121 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
80 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதால்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது என்று உ.பி. போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முழு காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே என்று எப்.ஐ.ஆரின் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், முழு முதற் காரணமான போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை என்கிற தகவல் உ.பி.ஐ அதிரவைத்திருக்கிறது.
இதற்குள் போலே பாபா தலைமறைவிட்டார். எப்.ஐ.ஆரில் பாபாவின் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளதால், அவரை தப்பிக்க வைக்க யோகி அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேரை கைது செய்திருக்கும் போலீசார், இந்த சம்பவம் திட்டமிட்ட சதியா? என்று விசாரித்து வருகின்றனர்.