சாமியார்கள் எல்லாம் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றே அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்து வாழ்க்கையை தொலைக்கின்றனர் மக்கள். அப்படித்தான் போலோ பாபா மீது அதீத நம்பிக்கை வைத்து அவரின் காலடி மண்ணை எடுக்கவும், அவர் சென்ற காரின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ளவும் முண்டியடித்ததில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து மிதிபட்டு மூச்சுத்திணறி உத்தரபிரதசேத்தில் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சாமியாரோ இத்தனை பேரின் உயிரிழப்புக்கு இரக்கம் தெரிவிக்காமல், சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் தலைமறைவாகிவிட்டார். தனது சொற்பொழிவு கூட்டத்திற்கு 80 ஆயிரம் பேருக்குத்தான் பந்தல் அமைப்பு, பாதுகாப்பு அமைப்பு என்று தெரிந்தபோதிலும் 2.5 மக்களை அனுமதித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் குற்றம் செய்த அவரின் பெயர் சம்பவம் குறித்த எப்.ஐ.ஆரிலும் பதிவாகவில்லை.
இப்படிப்பட்ட சாமியாரை கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று நம்பி உயிரை இழந்துவிட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான் கடவுளால் அனுப்பப்பட்டவை என்று எதுவும் இல்லை என்கிறார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘’ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக்கொண்டு, ‘கடவுளால் அனுப்பப்பட்டது’ என்று எதுவும் இல்லை என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்’’ என்கிறார்.
அவர் மேலும் அந்த பதிவில், ‘’உயர்ந்த சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழ மாட்டார்கள்’’ என்கிறார். அதாவது, கடவுளை நம்புபவர்கள் இதுபோன்ற சாமியார்களை நம்பமாட்டார்கள் என்கிறார்.
‘’கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் அதை உணர்கிறீர்கள்’’ என்று சொல்லும் குஷ்பு, ‘’இந்த பேரழிவை கடவுள் அனுப்ப முடியாது. 121 பேரும் தங்கள் கர்மாவால் இறக்கவில்லை. சாமியார்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்த அப்பாவிகள்’’ என்கிறார்.
’’ஹத்ராஸ் நெரிசலுக்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையாகவே ‘கடவுள் அனுப்பினார்’ என்ற வாசகம் இறந்தவர்களின் குடும்பங்களால் நியாயப்படுத்தப்படும்’’ என்கிறார்.