தலைமை மாற்றம் நிகழும் அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளன.
கட்சியின் சீனியர்களை அண்ணாமலையின் வார் ரூம் போட்டு வாரிவிட்டதில் சீனியர்கள் பலரும் கொதித்தெழுந்தனர். குறிப்பாக தமிழிசை சவுந்தரராஜன் அந்த வார் ரூமை கடுமையாகச் சாடினார். இதனால் பொதுமேடையில் தமிழிசையை அமித்ஷா கண்டித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் தமிழிசை வீட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்தினார். அப்படியும் அந்த விவகாரம் முடியாததால், தமிழிசையை டெல்லிக்கு அழைத்து பேசினார் அமித்ஷா.
இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழிசையை கடுமையாக விமர்சித்த திருச்சி சூர்யா கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இதனால் அவர் தமிழக பாஜகவில் என்னென்ன நடந்தது? என்று பட்டியல் போட்டு அம்பலப்படுத்திக் கொண்டு வருகிறார்.
சீர்காழி சத்யா உள்பட பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாஜகவைச் சேர்ந்த ரவுடிகள் போலீசில் பிடிபட்டு தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
தேர்தல் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை நிர்வாகிகள் அப்படியே ஆட்டைய போட்டுவிட்டதால் அதுகுறித்து விசாரிக்க தனி குழு ஒன்றையை அமைத்திருக்கிறது டெல்லி தலைமை. தவிர, மாவட்டம்தோறும் ஒரு நிர்வாகி சென்று அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்பாக இருக்கும் பிரச்சனை குறித்து ஆலோசிக்கையில், சில இடங்களில் அடிதடியும் நடந்து வருகிறது.
தங்க கடத்தல் வழக்கில் ப்ருத்வி சிக்கி இருப்பதன் மூலம் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலரும் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. இதன் பின்னணியில் எல்.முருகன் இருக்கிறார். அவர்தான் தங்களை சிக்க வைக்கிறார் என்று கேசவ விநாயகம் உள்ளிட்டோர் குமுறிக் கொண்டிருக்கின்றனர் என்று தகவல்.
கட்சியினர் பலர் மீது ஊழல் வழக்குகள் பாய இருக்கின்றன. இந்த நெருக்கடியான சூழலில் 6 மாதங்கள் படிக்கப்போகிறேன் என்று லண்டனுக்கு எஸ்கேப் ஆகிறார் அண்ணாமலை. இதனால் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அண்ணாமலையால் ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கே.டி.ராகவனோ, பொன்.ராதாகிருஷ்ணனோ இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்கிறது கமலாலயம்.