இரட்டைத்தலைமையில் இயங்கி வந்த அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அதிமுக இப்படி பிரிந்து கிடப்பதால் வாக்குகள் சிதறிப்போய், கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் சிதறிக்கிடக்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதிமுக சீனியர்கள் இணைப்பு பாலத்தை அமைக்க முயன்று வருகின்றனர்.
செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசித்து, பிரிந்தவர்கள் சேர்வதுதான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், சசிகலாவையும், ஓபிஎஸ்சையும் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கமாட்டேன் என்று இபிஎஸ் பிடிவாதம் பிடித்ததால் வாக்குவாதம் தடித்திருக்கிறது. இதனால் இன்னொரு தினம் பேசிக்கொள்ளலாம் என்று வெளியேறி இருக்கிறார்கள் அந்த 6 பேரும்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் அந்த 6 பேருடன் மேலும் சிலர் சேர உள்ளார்கள் என்கிறது அதிமுக வட்டாரம். இதனால் எடப்பாடிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இத்தனை நெருக்கடிக்கு இடையிலும் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓபிஎஸ்சை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று முரட்டு பிடிவாதமாக உள்ளார் இபிஎஸ். இது ஓபிஎஸ்க்கு கடும் கோபத்தை கொடுத்திருக்கிறது.
’’அவரை மாதிரி தெனாவட்டாகவோ, சர்வாதிராத்தோடவோ பேசமாட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். இணைப்பு இல்லாமல் அதிமுக இனி வெற்றிக்கு சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு தொண்டருக்கும் தெரியும். பொதுமக்களின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கிறது’’ என்ற ஓபிஎஸ்,
‘’என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்லுவதற்கு அவர் யா?’’ என்ற கேள்வியை எழுப்பி, ‘’அதிமுக பொதுச்செயலாளர் விவகார வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது’’ என்று எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அதிமுக தொண்டர்களால் உருவான இயக்கம். ஒரு தொண்டர்தான் அதிமுகவுக்கு தலைமை ஏறக வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இணைப்பு நடந்தால் பொதுச்செயலாளர் பதவியை இழக்க நேரிடும் என்றுதான் இபிஸ் இணைப்பு என்ற பேச்சுக்கே காது கொடுக்காமல் இருக்கிறார். சசிகலாவோ அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவேன் என்று சொல்லி வருகிறார். பொதுச்செயலாளர் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார் ஓபிஎஸ். இந்த நிலையில், ‘அந்த தொண்டர் யார்?’ என்று அதிமுகவில் சூட்டை கிளப்பி இருக்கிறது ஓபிஎஸ்சின் சூசக பேச்சு.