இருபத்து நான்கு ஆண்டுகள் மதுரை மாநகர மாவட்டச்செயலாளராக இருந்து வரும் செல்லூர் ராஜூவின் பதவியை அதிமுக தலைமை பறிக்க இருப்பதாக தகவல்.
அவ்வப்போது தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள் சொல்லி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்த செல்லூர் ராஜூ, மதுரை மக்களவை தொகுதியின் தேர்தல் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்திருப்பதால் அவரின் மா.செ. பதவி பறிக்கப்படப்போவதாக ர.ரக்கள் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
மதுரையில் பிரபல மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் சரவணன், சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்தார். அரசியல் ஆர்வம் கொண்டு 2015ல் மதிமுகவில் சேர்ந்தார். 2016ல் திமுகவில் இணைந்தார். 2017 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தோல்வியுற்றார். 2019 திருமங்கலம் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. ஆனார். 2021ல் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவில் இணைந்தார். ஒரு வருடத்திலேயே மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது நடந்த செருப்பு வீச்சு சம்பவத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்டு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.
நடந்த மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு செல்லூர் ராஜூ சரியாக வேலை பார்க்கவில்லை. தனது ஆதரவாளர்களையும், தனக்கு கீழ் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக வேலை செய்ய விடவில்லை. மீறி வேலை செய்தவர்களையும், அவர் வெற்றி பெற்றால் வேறு கட்சிக்கு சென்றூவிடுவார் என்று எச்சரித்து வேலை செய்ய விடாமல் தடுத்திருக்கிறார். இதனால்தான் மதுரையில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஓபிஎஸ்சின் சிலிப்பர் செல்லாகவும் இருக்கிறார் செல்லூர் ராஜூ. அதனால்தான் அவர் அதிமுகவுக்கு வேலை செய்யாமலும், யாரையும் வேலை செய்ய விடமாலும் இருக்கிறார் என்று மதுரை சென்ற எடப்பாடி பழனிச்சாமியிடமே புகார் கடிதம் கொடுத்திருக் கிறார்கள். இதையடுத்து செல்லூர்ராஜூவின் முன்னாள் உதவியாளர் இராம சுப்பிரமணியனிடம் நேரிலேயே விசாரித்திருக்கிறார் எடப்பாடி. அதிமுகவின் கோட்டையாக இருந்த மதுரை இன்றைக்கு மூன்றாம் இடத்திற்கு சென்றதுக்கு காரணமே செல்லூர் ராஜூதான். இந்த நிலை தொடர்ந்தால் மதுரையில் அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று எச்சரித்திருக்கிறார். அதற்கு எடப்பாடியும் அதுகுறித்து முடிவெடுப்பதாக சொல்லி இருக்கிறார்.
இதனால் செல்லூர் ராஜூவின் பதவி பறிக்கப்படப்போகிறதா? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகில் அம்மாபட்டியைச் சேர்ந்தவர் செல்லூர் ராஜு. சிம்மக்கல்லில் பழ வியாபாரம் செய்து வந்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ராஜூவை வளர்த்து வந்துள்ளார் அவரது தாய்.
பழக்கடை பாண்டியன் கடையில் லோடுமேன் வேலை பார்த்துக்கொண்டே கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். பழக்கடை பாண்டியன் மூலம் அதிமுகவில் சேர்ந்து, செல்லூர் 14வது வார்டு இளைஞரணிச் செயலாளர் ஆனார். 1996ல் மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் ஆனார். 2007ல் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியுற்ற செல்லூர் ராஜு, 2011 மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட செல்லூர் ராஜூ வென்றார். 2011ல் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ, 2016 தேர்தலிலும் வென்று அந்த அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். கேரளாவைச் சேர்ந்த ஜெயந்தியை திருமணம் செய்து கொண்ட செல்லூர் ராஜூவுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் இருந்தனர். 2012ல் நடந்த விபத்தில் மகன தமிழ்மணி உயிரிழந்தார்.
இருபத்து நான்கு ஆண்டுகள் மதுரை மாநகர மாவட்டச்செயலாளராக இருந்து வரும் செல்லூர் ராஜூவுக்கு, நிரந்தர மாவட்டச்செயலாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கடந்த 2022ல் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். இந்நிலையில் அந்த பதவி பறிக்கப்படப்போகிறது என்று தகவல் பரவுகிறது.