டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால், கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மக்களவை தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இடைக்கால ஜாமீன் பெற்றவர் கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டிஜிட்டல் ஆதாரங்களை அழித்தது, 100 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்தமைக்கான ஹவாலா ஆதாரங்கள் போன்றவற்றை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது அமலாக்கத்துறை.
இதையடுத்து அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியதை அடுத்து, மதுபான கொள்கை விவகாரத்தில் விற்பனையாளரின் லாபம் மட்டும் 590 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது தொடர்பான பல்வேறு கட்ட விசாரணையில்தான் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பது ஆதாரத்துடன் தெரியவந்தது என்றது அமலாக்கத்துறை.
மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். 10.11.2022ல் சரத் ரெட்டி கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்த அமலாக்கத்துறை, மதுபானக் கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் கோவா தேர்தலில் செலவிட்டார். கோவாவில் ஏழு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். 100 கோடி ரூபாய் தனக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த ஊழல் குறித்து விசாரணை விரிவாக சென்றபோதுதான் இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது தெரியவந்தது என்று அமலாக்கத்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வாதிட்டபோது, நிதி மோசடி தடுப்பு சட்டப்பிரிவு 19ன்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்திருக்கிறது என்று குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை, அரவிந்த் ஜெஜ்ரிவால் இரு தரப்புகளின் வாதங்கள் கடந்த மேம் மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா , திபாங்கர் தத்தா அமர்வு தீர்ப்பளித்தது.
மே மாதம் 10ம் தேதி உத்தரவில் இருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை அறிவோம். அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கும் மேலாக அவர் சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார். ஒருவரை கைது செய்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என்று சொல்வதை ஏற்க முடியாது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் கைது செய்வதற்கான அவசியம், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது. ஆகவே, அரவிந்த் ஜெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதாவது, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலகக்கூறும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கிறதா என்பதை உறுதிபடக் கூற முடியவில்லை. ஆகையால் அந்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவால் வசமே விடப்படுகிறது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை உச்சநீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு மாற்றியது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக பெரிய அமர்வுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பதால் ஜாமீன் கிடைத்தும் கூட, சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை இருக்கிறது. சிபிஐ தன்னை கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.