திருமாவளவன் சொல்லும் அந்த மாஸ்டர் மைண்ட் சிக்கினால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என்று தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் எல்லாரும் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று ஆரம்பத்தில் இருந்தே அடித்துச் சொல்லி வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்று சுரேஷின் தம்பி பொன்னை பாலு கொடுத்த வாக்குமூலத்தையும் நம்பவில்லை திருமா. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், எப்போதும் பாதுகாப்பாக இருக்கக்கூடியவர், தற்காப்புக்கு உரிமத்தோடு துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை கொலை செய்யப்பட்டார் என்றால் சாதாரணமான நபர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது.
மிகப்பெரிய கொலையாளிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். இதற்காக மாஸ்டர் பிளான் போடப்பட்டிருக்கலாம். ஆம்ஸ்ட்ராங் மீது கோபத்தில் இருக்கும் சுரேஷையும் பயன்படுத்தி இருக்கலாம். இதை எல்லாம் ஒரு மாஸ்டர் மைண்ட் இயக்கி இருக்க வேண்டும். அந்த மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசுக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார் திருமா.
பொதுவாகவே சரணடையும் குற்றவாளிகளை வைத்தே வழக்கை முடித்துவிடுவது காவல்துறையின் வழக்கம். கூலிப்படையினர் யார்? உண்மை குற்றவாளிகள் யார்? என்று விசாரித்து எல்லோரும் கைதாவதில்லை. அதுமாதிரியே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் நடந்து விடக்கூடாது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ராவுக்கு முக்கிய ரோல் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆருத்ராவுக்கும் ஆற்காடு சுரேஷுக்கும் முக்கிய பங்கு உள்ளது, ஆற்காடு சுரேஷின் காதலி பாஜகவில் பொறூப்பில் உள்ளார். ஆருத்ராவுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருந்ததாக தகவல் இருக்கின்றன. ஆருத்ராவுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்திருக்கிறார் திருமா.
ஆகவே, அந்த மாஸ்டர் மைண்ட் கண்டுபிடிக்கப்பட்டால், இது அரசியல் கொலையா? இல்லை, பழிக்குப்பழியா? என்ற உண்மை தெரியவரும்.