தபால் ஆபீஸ் எனப்படும் அஞ்சல் நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. தபால்காரர்கள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அப்போதுதான் உள்ளூர் மொழியில் எழுதப்பட்டுள்ள முகவரியைப் படித்து, யார் பெயருக்குக் கடிதம் வந்திருக்கிறதோ அதற்குரியவரிடம் சரியாகவும் விரைவாகவும் சேர்க்க முடியும்.
ரயில்வே துறையும் மத்திய அரசு நிறுவனம்தான். அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பணியில் அமர்த்தும் போதுதான் டிக்கெட் வழங்குவது, பரிசோதிப்பது, ரயில் நிலையங்களைப் பராமரிப்பது உள்ளிட்டவை சரியாக அமையும். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அடிப்படையானப் பணியாளர்கள் உள்ளூர் மொழியைப் பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
அண்மைக்காலமாக அதற்கு மாறான நிலை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ரயில்வே பணி, அஞ்சல் பணி ஆகியவற்றுக்கான இடங்களில் பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக, வடமாநிலத்தவர்கள் மிகவும் அதிகரித்துள்ளனர். தமிழ்ப் பயணிகள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் ஒரு பயணச் சீட்டு வாங்குவதற்குள் திணறிப் போகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் காலியாக இருந்த ரயில்வே பணியிடங்களுக்காகத் தேர்வு எழுத வந்த பீகார் மாநிலத்தவர்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளானார்கள். தங்களின் வேலை பறிபோவதாக மராட்டிய மாநிலத்து இளைஞர்கள் கொந்தளித்ததே இதற்கு காரணம்.
அரசுப் பணியிடங்கள் காலியானாலும் உடனடியாக நிரப்பப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் உள்ளூர் பணியாளர்களுக்கு உத்தரவாதமில்லை. இரு வகையிலும் இளைஞர் சமுதாயம் பாதிக்கப்படும் சூழலில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வாக்குறுதி அளித்தது பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசு. நிறைவேறாத அந்த வாக்குறுதி பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது மத்திய அமைச்சர்களோ பகோடா போடுவதும் இளைஞர்களுக்கான வேலைதான் என்றனர்.
உயர்கல்வி மேம்பாட்டிற்கான பி.எம். காலேஜ் ஆஃப் எக்சலன்ஸ் கல்வி நிறுவனத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்தியபிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ. பன்னாலால் ஷக்யா, “கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. இதற்கு பதிலாக மோட்டார் சைக்கிள்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்” என்று பேசியிருக்கிறார்.
படித்த இளைஞர்களை நம்பிக்கையிழக்கச் செய்யும் இத்தகைய தொடர் நடவடிக்கைகளுக்கு நடுவில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவகை தொழில்நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளில் உள்ளூர்வாசிகளுக்கு 50% வேலைவாய்ப்பும், நிர்வாகம் அல்லாத பிற பணிகளில் (உற்பத்தி, பராமரிப்பு போன்றவை) 75% வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்ற சட்டமுன்வடிவுக்கு முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த சட்ட முன்வடிவு மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், யார் உள்ளூர்க்காரர்கள் என்பதற்கான அளவுகோலாக, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர்கள்-கர்நாடக மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்கள், கன்னட மொழியைப் பேச-படிக்க-எழுதத் தெரிந்தவர்கள் உள்ளூர்க்காரர்கள் என்ற தகுதியைப் பெற்றவர்களாவர் என கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தத் தகுதியுடன், நிறுவனத்தில் பணி வாய்ப்பை உருவாக்கித் தரும் முகமையின் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளி இறுதித் தேர்வில் கன்னடத்தை மொழிப்பாடமாகப் படித்திருக்க வேண்டும். அல்லது கன்னட மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனைகளும் உள்ளன.
போதிய அளவில் உள்ளூர் பணியாளர்கள் இல்லையென்றால், அரசாங்கத்துடன் சேர்ந்து தனியார் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு மூன்றாண்டுகளில் பயிற்சி அளித்து பணியமர்த்த வேண்டும் உள்ளிட்டவையும் இந்த சட்டமுன்வடிவில் இடம்பெற்றுள்ளன. இந்த சட்டமுன்வடிவு கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கலாகும்போது அதன் சாதகம்-பாதகம் குறித்த விவாதங்களை எதிர்பார்க்கலாம்.
இத்தகைய நிபந்தனைகளை ஏற்று முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வருமா, நீதிமன்றங்கள் இந்த சட்டத்தை உறுதி செய்யுமா என்பன போன்ற சவால்களும் உள்ளன.
தொழில்துறையில் தமிழ்நாடு அண்மை ஆண்டுகளில் பரலான வளர்ச்சியையும் கட்டமைப்பையும் பெற்றிருப்பதுடன், உயர்ந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் உள்நாட்டு-வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. இன்ஜினியர்கள் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்பதால் புதிய வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு கூடியுள்ளது. அரசாங்கத்தின் நான் முதல்வன் திட்டம் போன்றவை அதற்கேற்ற பயிற்சிக்களங்களை உருவாக்கித் தருகின்றன.
தகுதியான வேலையைத் தேடும் இளைஞர்களும், திறமையான இளைஞர்களைத் தேடும் நிறுவனங்களும் ஒரு நேர்க்கோட்டில் வருவதற்கு அரசுகள் இத்தகைய முன்னெடுப் புகளை மேற்கொள்ள வேண்டும். சட்டங்களும் தீர்ப்புகளும் அவற்றிற்குத் துணை நின்றால் மட்டுமே, உள்ளூர்க்காரர்களுக்கு உத்தரவாதமான – உயர்ந்த வேலை என்பது சாத்தியமாகும்.