Swiggy, Zomoto போன்ற உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மூலமாக வீடு தேடி மது விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதற்கு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அதுபோல பிளாஸ்டிக் பேக்களில் டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் மது விற்கப்படும் என்ற தகவலையும் டாஸ்மாக் மறுத்துள்ளது. கடந்த ஆண்டில், திருமணம் உள்ளிட்ட விருந்து நடைபெறும் மண்டபங்களில் உரிய அனுமதியுடன் மது விநியோகிக்கும் முறை நடைமுறைக்கு வருவதாக அரசுத் தரப்பு ஆவணங்களுடன் செய்தி வெளியாகி, பின்னர் அது மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டும் விட்டது. மது விற்பனை-உரிமம்-அனுமதி போன்வற்றில் தமிழ்நாடு பல ஆண்டுகளாகவே தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த ஆண்டு மரக்காணத்திலும் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியிலும் நடந்த விஷச்சாராய மற்றும் கள்ளச்சாராய சாவுகள் அந்தந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறைக்கு வரவேண்டும் என்பதை தி.மு.க.வின் தோழமைக் கட்சியான விடுதலை சிறுத்தைக் கட்சியே வலியுறுத்தியது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என 2016 தேர்தலில் வாக்குறுதி வழங்கப்பட்டு, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார் ராமதாஸ்.
ஜெயலலிதாவின் 2011-2016 ஆட்சியில் மதுக்கடைகளை மூடப்போவதாகத் தொடர்ச்சியான செய்திகள் வெளிவந்தபடி இருந்தன. அவர் எதையும் செய்யக்கூடியவர் என எதிர்க்கட்சிகள் நம்பியதால் பா.ம.க மட்டுமல்ல, தி.மு.க.வும் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஜெயலலிதா அந்த ஐந்தாண்டுகளில் மதுவிலக்கைக் கொண்டு வரவில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் குறைக்கப்படும் என்றுதான் தேர்தல் வாக்குறுதி அளித்தார். மதுவிலக்கிற்கான முதல் கையெழுத்து என்ற கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியவில்லை. படிப்படியாகக் குறைப்பேன் என்ற ஜெயலலிதாதான் 2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதலமைச்சரானார்.
கள்ளச்சாராயம்-விஷச்சாராயம் ஆகியவற்றை ஒழிப்பதும், மழுமையான மதுவிலக்கு என்பதும் ஒன்றல்ல. மதுப்பழக்கம் மனிதப்பழக்கமாக பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. குடிப்பழக்கம் இல்லாதவர்கள் என்று ஒரு சாரார் இருப்பதுபோலவே குடிப்பழக்கம் கொண்டவர்களும் உலகெங்கும் வாழ்கிறார்கள். ஜனநாயக நாடுகளில் மதுவிலக்கு என்பது வெற்றிகரமாக அமைந்ததில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் மட்டும் முழுமையான மதுவிலக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. சட்டரீதியாக மதுவிலக்கு இருந்தாலும், அங்கே மது விற்பனைக்கு பஞ்சமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் குஜராத் வாக்காளர்களுக்கு பா.ஜ.க.வும் மற்ற கட்சியினரும் பாக்கெட் மது கொடுத்து வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. டோர் டெலிவரி, குழாய் மூலம் சப்ளை போன்ற டெக்னிக்குகள் குஜராத்திலிருந்தே மற்ற மாநிலங்களுக்கு அறிமுகமாயின.
போர்த்துகீசு நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கோவா, பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி போன்ற இந்தியப் பகுதிகளில் மது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் அதே நிலைதான். ஆனால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் சமூகக் கட்டுப்பாடே, மதுவிலக்கு எனும் மாய அரசியலுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
உண்மையை உடைத்துச் சொல்வதென்றால், தரமான மதுவை எளிதாகவும் நியாயமான விலையிலும் கிடைக்கும்படி செய்வதே கள்ளச்சாராயம்-விஷச்சாராயம் போன்றவற்றிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நேர்மையான வழியாகும். பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை செய்யும் இடங்களில் மது அருந்திவிட்டு வருவதைத் தடுப்பதில் தீவிர நடவடிக்கைகள் வேண்டும். மது பாட்டில்கள் வாங்குதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும். குடிப்பதற்கான அளவிலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அவற்றை முறையாகக் கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடிப்பவர்களை மதுப்பிரியர்கள் என்கிறது அரசாங்கம். ஆனால், அந்த மதுப்பிரியர்கள் குடிக்கும் டாஸ்மாக் பார்கள் பொதுக்கழிவறைகளை விட கேவலமாக இருக்கின்றன. சிறைக் கைதியை உறவினர்கள் பார்ப்பதுபோலத்தான் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் கட்டமைப்பும் உள்ளது. பாட்டிலின் விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மீதிச் சில்லரை தர மறுப்பது, குறிப்பிட்ட வகை மது பாட்டில்களை மட்டுமே விற்பது உள்ளிட்ட அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும். மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதி வைப்பது மட்டுமே தீர்வாகிவிடாது.
வளர்ந்த நாடுகளிலும், சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடுகளிலும் குடிப்பவர்கள் மற்றவர்களைப் பார்த்தால் ஒதுங்கிப் போகிறார்கள். இந்தியாவில்-தமிழ்நாட்டில் குடிப்பவர்களைப் பார்த்தால் மற்றவர்கள் ஒதுங்கிப் போக வேண்டியிருக்கிறது. மது பற்றிய அரசியல் கொள்கை-மது விற்பனை முறை ஆகியவற்றில் உள்ள தள்ளாட்டமே இதற்கு காரணம்.