அமெரிக்காவில் இந்த ஆண்டு(2024) நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் பிரதான கட்சிகளாக இருக்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் தங்களின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளன.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் பைடன் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில் கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் காரசாரமாக நடைபெற்றது.
கருக்கலைப்பு மற்றும் பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கருக்கலைப்பு உரிமை தொடர்பான விவாதங்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
பின்னணி
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் 1973-ம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992-ம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2022-ம் ஆண்டு வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாகாணங்கள் வாரியாக மாற்றப்பட்டு வருகின்றன.
2022-ம் ஆண்டு தீர்ப்புக்குப் பிறகு சுமார் 14 மாகாணங்களில் கருக்கலைப்பு உரிமை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் கருக்கலைப்பு உரிமை நடைமுறையில் உள்ளது. பிற மாகாணங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் மிக குறைந்த கால அவகாசமுடன் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளன.
இந்த சூழலில், அமெரிக்காவின் பிரதான கட்சிகள் கருக்கலைப்பு விவகாரத்தில் இரு வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்களில் கருக்கலைப்பு உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.
ஜோ பைடன்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்க ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். நாடு தழுவிய அளவில் கருக்கலைப்பு உரிமைக்கு தடை விதிக்க நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி விட்டோ செய்வேன் என்றும் பைடன் கூறியுள்ளார்.
கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களுக்கு பாதுகாக்கவும், மாகாணங்களின் சட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்களில் கருக்கலைப்பு உரிமை தடை செய்யப்பட்டுள்ளதை ஜோ பைடன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
டொனால்ட் டிரம்ப்
கருக்கலைப்பு விவகாரத்தில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை பல்வேறு முறை மாற்றி வந்துள்ளார்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 பழமைவாத நீதிபதிகளே 2022-ல் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதற்கு காரணம்.
1973-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய தேவையான நீதிபதிகளை நியமிப்பேன் என 2016-ல் உறுதி அளித்திருந்த டிரம்ப், 2017-ல் தான் ஆட்சிக்கு வந்தது முதல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 3 நீதிபதிகளை நியமித்தார்.
நாடு முழுவதும் பெண்கள் கர்ப்பம்தரித்த 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதா, டிரம்ப் ஆட்சிகாலத்தில் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மேல்சபையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
2022-ம் ஆண்டு வெளியான தீர்ப்புக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது முதல் கருக்கலைப்பு உரிமை குறித்து தெளிவவற்ற வாக்குறுதிகளை டிரம்ப் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், கருக்கலைப்பு உரிமை குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்துகொள்ளலாம் என தற்போது டிரம்ப் கூறி வருகிறார். மேலும் நாடு தழுவிய கருக்கலைப்பு தடை சட்டம் கொண்டுவரப்பட்டால், தான் அதில் கையெழுத்திட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
‘அமெரிக்க அதிபர் தேர்தல்’
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது. வெற்றி பெறும் நபர் அடுத்த நான்கு ஆண்டுகள் அதிபராக இருப்பார். ஜனவரி 2025 முதல் அவரது பதவிக்காலம் தொடங்கும்.
சமீபத்தில் நடந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து அடிக்கடி பல்வேறு விமர்சனங்கள் எழுவதால், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்நிறுத்த சொந்த கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றன.
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக பேரணிகளும் பல்வேறு சட்டப் போராட்டங்களும் நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்களில் முதன்மையான விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்தியா
இந்தியாவில் 1960-கள் வரை, கருக்கலைப்பு சட்டவிரோதமான ஒன்றாக இருந்து வந்தது. கருக்கலைப்பு செய்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 312 இன் கீழ் அந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு உரிமை வழங்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
கருத்தரித்த பிறகு 12 வாரங்கள் வரை உள்ள கருவை ஒரு மருத்துவரின் கருத்து அவசியம் பெற்று கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம் .
குழந்தையின் வளர்ச்சி அல்லது குழந்தை பிறப்பு தாயின் உயிருக்கு ஆபத்து விளைக்கும்/ அல்லது மன ஆரோக்கியம் பாதிக்குமானால் 2 மருத்துவர்கள் ஆலோசனைப்படி 12 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிறவி இதயக் குறைபாடு மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்ற சில நிலைகளைக் கண்டறிவது பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி அடையும் பருவத்தில் இருப்பதால் கருக்கலைப்புக்கான காலம் இந்தியாவில் 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.
2021 மீண்டும் இந்த சட்டம் திருத்தப்பட்டது. அதில் ஏற்கனவே இருந்த வரைமுறைகளோடு குழந்தை மற்றும் தாயின் உடல் மற்றும் மன நலத்தை கருத்தில் கொண்டு 24 வாரங்களுக்கு பிறகும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.