இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களை ஹேக்கர்கள் திருடியுள்ளது கிரிப்டோ சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WazirX நிறுவனத்தின் வாலட்களில் ஒன்று ஹேக் செய்யப்பட்டு திருட்டு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், பயனர்கள் முதலீடு செய்திருந்த சுமார் 230 மில்லியன் டாலர்கள் பறிபோனதாகவும், நேற்று(ஜூலை 18) அந்நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் தகவலை வெளியிட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் WazirX நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி தளமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏராளமான கிரிப்டோ கரன்சி பயனர்களை உருவாக்கியுள்ள WazirX நிறுவனம், நிதிப் புலனாய்வுப் பிரிவில் (FIU) பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.
கிரிப்டோ உலகில் மிகப் பெரிய திருட்டாக பார்க்கப்படும் இந்த பாதுகாப்பு மீறலை, Web3 பாதுகாப்பு நிறுவனமான Cyvers முதலில் கண்டறிந்து வெளிக்கொணர்ந்தது.
Ethereum கிரிப்டோகரன்சி blockchain-ல் WazirX நிறுவனத்தின் Safe Multisig வாலட்டுடன் தொடர்புடைய “பல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை” கண்டறியப்பட்டுள்ளதாக, Cyvers பாதுகாப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதை அடுத்து, “வாலட் ஹேக் செய்யப்பட்டது பற்றி தீவிரமாக விசாரித்து வருவதாகவும் பயனர்களின் டிஜிட்டல் முதலீட்டைப் பாதுகாக்க இந்திய ரூபாய் மற்றும் கிரிப்டோ கரன்சி எடுப்பதற்கான வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என்று WazirX கூறியுள்ளது.
சைபர் தாக்குதலுக்குப் பின்னால் வட கொரியாவைச் சேர்ந்த சைபர் க்ரைம் அமைப்பான Lazarus இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஹேக்கிங் சம்பவம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் உள்ள அபாயத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் துறையில் வலுவான பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படுவதையும் உணர்த்துகிறது.
இந்திய அரசு கிரிப்டோகரன்சி துறையை ஆய்வு செய்து கடுமையான விதிமுறைகளை விதிக்க பரிசீலித்து வரும் நேரத்தில், இந்திய மதிப்பில் சுமார் 1,920 கோடி ரூபாய் திருட்டு நடந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.