அண்மையில் சுட்டு பிடிக்கப்பட்ட சீர்காழி சத்யா முதல் நேற்று பிடிபட்ட அஞ்சலை வரை பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ரவுடிகள். ஆம்ஸ்ட்ராங் வழக்கின் தீவிரம் கருதி அஞ்சலையை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது பாஜக.
தமிழ்நாடு பாஜகவில் 124 ரவுடிகள் உள்ளனர். இவர்கள் மீது 834 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் முதலிடத்தில் இருப்பவர் நெடுங்குன்றம் சூர்யா. தமிழக பாஜகவின் பட்டியல் அணி மாநில செயலாளரான இவர் மீது மட்டும் 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று குற்றம் சாட்டி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.
பாஜக ஒரு வாஷின் மெஷின். ஊழல், முறைகேடு, மோசடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றப்பின்னணி கொண்டவர்களை எல்லாம் பாஜகவில் சேர்ந்துவிட்டால் புனிதராக்கி விடும் எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜனே, பாஜகவின் ரவுடுகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
தமிழக பாஜகவில் மட்டும் இந்த நிலை இல்லை. தேசிய அளவிலும் இதே நிலைதான் உள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படி குற்றப்பின்னணி கொண்டவர்களை கட்சியில் சேர்ப்பது என்பது சரியா? என்ற கேள்விக்கு, ‘’ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அவர் பாஜகவில் இருந்தால் அவரை கட்சியை விட்டு நீக்குகிறோம். அதே நேரம் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு அரசியல் உரிமையை மறுப்பது நியாயமல்ல. குற்றப்பின்னணி கொண்டவர்கள் கட்சியில் சேர்வதிலும் எந்த பிரச்னையும் இல்லை’’ என்று சொல்லி அதிரவைக்கிறார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்.