நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழக பாஜகவில் தான் ஓரகட்டப்படுவதாக உணர்ந்த அண்ணாமலை, கட்சி தலைமை ஒரு முடிவெடுத்து அறிவிப்பதற்கு முன்பாகவே தானே முந்திக்கொள்வது தான் அழகு என்று முடிவெடுத்த அண்ணாமலை வெளிநாட்டிற்கு சென்று படிக்க இருப்பதாகவும் அதற்காக 6 மாதங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதுநாள் வரையிலும் அந்த கடிதத்திற்குஅனுமதி அளிக்காமல் இருந்து வந்த மோடி, இப்போது திடீரென்று அனுமதி அளித்திருக்கிறார். அண்ணாமலை 6 மாதங்கள் வெளிநாடு செல்லும் வேளையில், தலைவர் பொறுப்பில் யாரை அமரவைப்பது என்பது குறித்து கட்சியின் சீனியர்களுடன் மோடியும், அமித்ஷாவும் ஆலோசித்திருக்கிறார்கள். இந்த ஆலோசனையில் தமிழக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரனை தற்காலிக தமிழக பாஜகவின் தலைவராக்க முடிவெடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் அண்ணாமலை வெளிநாடு சென்றதும், நயினார் நாகேந்திரன் குறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்கிறது கமலாலயம் வட்டாரம்.
ஆறு மாதங்கள் கழித்து அண்ணாமலை இந்தியா திரும்பியதும் அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கமலாலயத்தில் இருந்து தகவல் கசிகிறது.