நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை. சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மாஞ்சோலை மற்றும் குதிரைவெட்டி, நாலுமுக்கு , காக்காச்சி பகுதிகளை 1919 முதல் 2028 வரையிலும் பிபிடிசி என்கிற பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. இந்த 8,373 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை, காபி, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டது அந்த நிறுவனம்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேராளாவில் இருந்து இப்பகுதிக்கு வந்து ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். பிபிடிசியின் குத்தகை காலம் முடியும் இன்னும் 4 ஆண்டுகள் இருந்தாலும், இந்த மாஞ்சோலையை காப்புக்காடாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் வனத்துறை இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் திடீரென மாஞ்சோலையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உள்ளதால் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, வீடு வழங்கி, வாழ்வாதாரத்திற்கான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகள் விபரம்:
*கிராமப்பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு .
*வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாப்பாங்குளம் மற்றும் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விலையின்றி வீடுகள் ஒதுக்கீடு.
*55 வயதுக்கு உட்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு 35% மானியமும், 6% வட்டிச்சலுகையுடன் சுய தொழில் தொடங்க கடன்.
*புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதர பிரிவு தொழிலாளர்களுக்கு சுய தொழில் தொடங்க 25% மானியமும், 3% வட்டி சலுகையுடன் 75 லட்சம் ரூபாய் வரையிலும் கடன்.
*தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் மூலம் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் திறன் பயிற்சி.
*திறன் பயிற்சி முடிப்பவர்களுக்கு தனியார் துறையில் உரிய வேலை வாய்ப்பு
*ஆவின் மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக ஆடு, கறவை மாடுகள் வாங்கவும், சிறிய பால் பண்ணைகள் அமைக்கவும் வட்டியில்லாக்கடன்.
*மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் சிறு கடன்கள்.
*பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை மற்றும் அரசு விடுதிகளில் முன்னுரிமை.
*சிறப்பு முகாம்கள் மூலமாக தொழிலாளர்கள் குடியேற விரும்பும் முகவரியில் குடும்ப, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள்.
*தொழிலாளர் நலத்துறை மூலம் 75% கருணைத் தொகையினை நீதிமன்ற உத்தரவின்படி வழங்கவும், மாதாந்திர ஓய்வூதியம் உள்பட அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்க நடவடிக்கை.