Ola நிறுவனம் சமீபத்தில் தனது செயலியில் அறிமுகம் செய்த Ola Maps அம்சத்தில், தங்களின் தரவுகள் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக MapMyIndia நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தனது தரவுகளை பயன்படுத்த லைசென்ஸ் உரிமத்தை பெற்ற Ola நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை மீறி சட்டவிரோதமாக தரவுகளை சேமித்தும் ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்தும் Ola தனது புதிய Maps அம்சத்தில் பயன்படுத்தியுள்ளதாக MapMyIndia கூறியுள்ளது.
நியாயமற்ற வணிக லாப நோக்கங்களுக்காக சட்டவிரோமாக தங்களின் தரவுகளை திருடியுள்ள Ola, அது கூறுவது போல் சொந்தமாக API மற்றும் தரவுகளை உருவாக்கியதாக தெரிவிக்கும் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என MapMyIndia-வின் தாய் நிறுவனமான CE Info Systems தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து வலை நிறுவனமான Ola cabs, தனது செயலியில் தனது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கிய Ola Maps-ஐ முழுமையாக செயல்படுத்தி உள்ளதாக கடந்த ஜூலை -ம் தேதி அறிவித்திருந்தது.
Azure மற்றும் Google Map போன்ற பிற நிறுவனங்களின் பயன்பாடுகளை உபயோகித்து வந்த OLA, தான் உருவாக்கிய Krutrim செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவைகளில் இருந்து முழுமையாக வெளியேறியதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி MapMyIndia நிறுவனம் குற்றம்சுமத்தி உள்ளதற்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் என Ola நிறுவனம் கூறியுள்ளது. MapMyIndia கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்பதை எந்த சந்தேகத்திற்கு இடமின்றி கூற விரும்புவதாகவும் OLA தெரிவித்துள்ளது.