அதிமுகவுடன் இணைந்துவிட வேண்டும் என்று சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் அல்லாடிக்கொண்டிருக்க, இவர்களை இணைத்து விட இணைப்பு பாலமாக நின்று அல்லாடிக்கொண்டிருக்கிறார் அந்த தொழிலதிபர்.
அதிமுக ஒருங்கிணைப்புக்குழு என்று கூட உருவாகி அதுவும் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எதற்கும் அசையாமல், யாரையும் கட்சியில் சேர்ப்பது இல்லை என்று பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் இணைப்பு நடவடிக்கைக்கான முயற்சிகள் நடந்து வருவதை எல்லாம் கொஞ்சம் கூட கவனிக்காமல், தொடர் தோல்விகள்தான் இந்த நெருக்கடிக்குக் காரணம். தோல்விகளை காரணம் காட்டித்தான் கட்சிக்குள் நுழைய முற்படுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் இந்த கறை நீங்கிவிடும். அதற்காக எல்லோரும் என்னுடன் ஒத்துழைத்து உழைத்திடுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார் எடப்பாடி.
2026ல் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் இணைப்பு நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அதிமுக ஆர்வலர்கள் பலரும் நினைக்கின்றனர். தொழிலதிபர் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் அபினாஷும் இந்த முயற்சியில் உள்ளாராம். ஓபிஎஸ்க்கு நெருக்கமான இவர், அதிமுகவில் எப்படியும் ஓபிஎஸ்சை நுழைத்துவிட வேண்டும் என்று முயன்று வருகிறாராம். சசிகலா உள்ளிட்டோரையும் அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி வருகிறாராம்.
அபினாஷ் மூலம் இணைப்பு சாத்தியமாகும் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம் ஓபிஎஸ். ஆனால், சசிகலாவோ, அபினாஷின் முயற்சி எல்லாம் வீண். பாஜக டெல்லி தலைமை அதட்டி உருட்டினால்தான் எடப்பாடி பழனிச்சாமி வழிக்கு வருவார் என்று சொல்லிவிட்டாராம் சசிகலா.
சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்கும் முயற்சிகளை எடுத்து வந்தாலும், ஓபிஎஸ்சை எப்பாடு பட்டாவது அதிமுகவில் இணைத்துவிட துடிக்கிறாராம் அபினாஷ். ஆனால் எடப்பாடியுடம் தூது போகும் அவரின் முயற்சிகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக ஆகிவிடுகிறதாம். ஆனாலும் சளைக்காமல் ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மாறி மாறி தூது போய்க்கொண்டிருக்கிறாராம் அபினாஷ்.