ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்புத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக கத்தார் நாட்டில் இருந்து தெஹ்ரான் சென்றிருந்த இஸ்மாயில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே காசாவில் பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில், போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவப் படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளை உச்ச போர் பதற்றத்தில் நுழையச் செய்துள்ளது.
இஸ்மாயில் ஹனியே யார்?
62 வயதான ஹனியே 1980-களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். கடந்த 2017 முதல் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத் தலைவராக ஹனியே பதவி வகித்து வருகிறார்.
இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் அமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
ஹமாஸ் அமைப்பு சார்பில் போட்டியிட்டு கடந்த 2006-ஆம் ஆண்டில் பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) 10-வது பிரதமராக பதவியேற்ற இஸ்மாயில் ஹனியே, பாலஸ்தீனத்தின் ஃபத்தா மற்றும் ஹமாஸ் ஆகிய இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையே நடந்த அதிகார மோதலால் ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என ஏற்க மறுத்த இஸ்மாயில் ஹனியே, 2014 ஆண்டு வரை பாலத்தீன அரசாங்கத்தின் பிரதாமராகவே செயல்பட்டு வந்தார்.
2017-ம் ஆண்டில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக இஸ்மாயில் ஹனியே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரசு அவரை 2018-ல் பயங்கரவாதியாக அறிவித்தது. 2017 முதல் பெரும்பாலும் கத்தார் நாட்டிலேயே இஸ்மாயில் வசித்து வந்தார்.
காசாவில் கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையில் இஸ்மாயில் ஹனியே முக்கிய பங்கு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இஸ்மாயில் ஹனியே படுகொலை‘
இந்த சூழலில், ஈரானின் புதிய அதிபராக தேர்வான மசூத் பெசெஷ்கியனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்த இஸ்மாயில் ஹனியே, தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. வான்வழி தாக்குதலில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஈரான் ராணுவமும் உறுதி செய்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு முழுமையான போர் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில், இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.
நேற்று(ஜூலை 30), லெபனான் தலைநகர் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய ராணுவத் தளபதி கொல்லப்பட்டதாக சர்வ தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி எச்சரித்துள்ளார்.
இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்பேற்காத சூழலில், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் பிராந்திய மோதலைத் தொடங்க இஸ்ரேல் முயற்சிப்பதாக துருக்கி வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கொலை என ரஷ்யாவும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.